Published : 11 Jul 2020 02:20 PM
Last Updated : 11 Jul 2020 02:20 PM
கரோனா வைரஸால் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார, சுகாதார நெருக்கடி நிலவுகிறது. வேலைவாய்ப்பு, உற்பத்தி, வாழ்க்கை முறை அனைத்திலும் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்மறையான சூழல் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ வங்கியின் 7-வது பொருளாதார மாநாடு மும்பையில் இன்று நடக்கிறது. இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார்.
அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:
''கரோனா வைரஸால் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார, சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, உற்பத்தி, மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் இதுவரையில்லாத வகையில் எதிர்மறையான பாதிப்பைக் கொடுத்துள்ளது. இந்தப் பாதிப்பு உலகளாவிய வகையில் முதலீடு, தொழிலாளர்கள் என அனைத்திலும் தொடர்கிறது.
நம்முடைய பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்பு முறைக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சோதனையாக கரோனா வைரஸ் இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைத்து வருகிறது. இதுவரை 135 புள்ளிகள் குறைத்துள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதைக் கையாளவும், சமாளிக்கவும் வட்டி வீதம் குறைக்கப்பட்டது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. கரோனா வைரஸால் வங்கிகள் மீது எந்தவிதமான தாக்கமும், பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்க ரிசர்வ் வங்கி பன்முகப் பாதுகாப்பு அணுகுமுறைகளை வழங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்குச் சமமான முக்கியத்துவத்தை ரிசர்வ் வங்கி அளிக்கும்.
சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் வங்கி முறை, நிதிச்சூழல் முறை தகுதியுடையதாக இருக்கிறது. இந்தச் சவாலான நேரத்தில் வங்கிகள் தங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தி, இடர்ப்பாடுகளைத் தாங்கும் மேலாண்மையைக் கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சூழல் வரும்வரை காத்திருக்கமல், இடர்களைத் தாங்கும் வகையில் வங்கிகள் தங்கள் முதலீடுகளை முன்கூட்டியே அதிகரிக்கத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதிச் சூழலையும், முதலீட்டையும் வலிமையாக்க வேண்டும்.
ஏனென்றால், கரோனா வைரஸ் பாதிப்பு அகன்றபின், அதன் பொருளாதாரத் தாக்கத்தின் விளைவாக வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கலாம். வங்கிகளின் முதலீடுகள் குறையவும் வாய்ப்புள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு திட்டம் என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும்''.
இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT