Published : 11 Jul 2020 01:12 PM
Last Updated : 11 Jul 2020 01:12 PM
மத்தியப் பிரதேசத்தில் ரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியதா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரீவா பகுதியில் 750 மெகா வாட் திறனில் சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி மூலம் திறந்து வைத்து நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் இது என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
500 ஏக்கரில் அமைந்துள்ள 750 மெகா வாட் சூரிய மின்சக்தி திட்டத்தால், 15 லட்சம் டன் கார்பன் எரிவாயு வெளியேறுவது தடுக்கப்படும். இந்த மின்திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதம் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும், மீதமுள்ள 76 சதவீதம் மத்தியப் பிரதேச அரசு மின்பகிர்பான நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தமைக்கு எதிராக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், “மத்தியப் பிரதேசம் ரீவாவில் இன்று திறக்கப்பட்ட 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியது என்று மத்திய அரசு எப்படிக் கூற முடியும் என்று மத்திய மின்துறை அமைச்சர் கண்டிப்பாகப் பதில் அளிக்க வேண்டும்.
கர்நாடகாவில் 2 ஆண்டுகளுக்கு முன் பவகாடா பார்க்கில் 2 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் திறக்கப்பட்டதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளபோது இதை எவ்வாறு தெரிவிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று நிகழ்ச்சியில் பேசுகையில், “ரீவா நகரம் வெள்ளைப்புலிகளுக்கும், நர்மதை நதிக்கும் மட்டுமே அடையாளமாக இருந்த நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் உள்ள நகராகவும் அடையாளம் பெறும்” என்று கூறிய தொகுப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது.
அதை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதில் இந்தி மொழியில் “அசாத்தியகிரஹி” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அர்த்தம் ‘உண்மைக்காகப் போராடுவதில் நம்பிக்கை இல்லாதவர்கள்’ என்று குறிப்பதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT