Published : 11 Jul 2020 10:42 AM
Last Updated : 11 Jul 2020 10:42 AM
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் சீனா ராணுவத்தின் ஊடுருவல், ஆக்கிரமிப்பு, மற்றும் தாக்குதல் ஏதும் நடந்ததா என்பது குறித்த உண்மைகளைக் கண்டறிய சார்பற்ற உண்மைக் கண்டறியும் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய,சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், சீன தரப்பிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 3 கட்டப் பேச்சு நடத்தப்பட்டது. மேலும் இரு நாட்டு உயர் அதிகாரிகள் தரப்பிலும், தூதரக அளவிலும் அமைதிப்பேச்சு நடந்தது.
இதில் எல்லைகளில் இருந்து இரு நாட்டு ராணுவமும் திரும்பிச் செல்வதற்கு ஒப்புக்கொண்டன. இதன்படி சீன ராணுவம், எல்லையில் உள்ள கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதியில் இருந்து முழுமையாகச் சென்றுவிட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 வாரங்களாக நீடித்த பதற்றம் பெரும்பாலும் குறைந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சுயமான அமைப்பின் மூலம் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு, ஊடுருவல், தாக்குதல் ஆகியவை குறித்து உண்மைகளைக் கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை கருத்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 144 அதிகாரிகளும் வலியுறுத்தியிருந்தனர்.
எல்லையில் இந்தியா , சீன ராணுவ மோதல் தொடங்கியதிலிருந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல்காந்தி, சீனாவிடம் இந்தியாவின் நிலங்களை ஒப்படைத்துவிட்டார் பிரதமர் மோடி என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்த சூழலில் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று பதிவிட்ட கருத்தில் “ ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் சொல்வதை இந்திய அரசு கவனம் செலுத்தி கேட்டு, இந்திய எல்லையில் இந்திய நிலப்பபகுதி சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தேசத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
எல்லையில் சீனாவில் நடந்த தாக்குதல்கள், ஊருடுவல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றைப் பற்றி சுயமான உண்மை கண்டறியும் குழுவை அங்கு செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
மேலும், தனது ட்விட்டரில் 144 ராணுவ உயர்அதிகாரிகள், ராணுவத்தின் சீரமைப்பு, நம்பகத்தன்மைக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செய்தி லிங்கையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்தில் “ எல்லையில் சீன ராணுவம் திரும்பிச் செல்வதையும், பதற்றத்தைக் குறைப்பதையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆனால், மக்கள் எல்லையில் தொடர்ந்து என்ன நடக்கிறது, அங்குள்ள செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பாளர்கள். ஆனால், நினைவில் கொள்ளுங்கள், 2020,மே 5 –ம் தேதிக்கு முன் இருந்த அதே நிலை எல்லையில் தொடர்வதை இலக்காக கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT