Last Updated : 11 Jul, 2020 08:43 AM

3  

Published : 11 Jul 2020 08:43 AM
Last Updated : 11 Jul 2020 08:43 AM

2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும்: நாடாளுமன்ற குழு தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

2020-ம் ஆண்டுக்குள் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க வாய்ப்பில்லை 2021-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் கரோனா தடுப்புமருந்தை எதிர்பார்க்க முடியும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தலைவராகவும், 30 எம்பிகளும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால், நேற்றைய கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், கரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து, மத்திய அறிவியல் மற்றும்தொழில்நுட்பத்துறை, உயிரிதொழில்நுட்பத்துறை, சிஎஸ்ஐஆர், அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் ஆகியோர் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

கடந்த மார்ச் 25-ம் தேதி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபின் நாடாளுமன்ற நிலைக்குழு முதல் முறையாக நேற்றுக் கூடியது.

சமீபத்தில் ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் கரோனாவுக்கான தடுப்பு மருந்தான கோவாக்ஸின் மருந்தை மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனை விரைவாக முடித்து ஆக்ஸட் 15-ம் தேதி அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்காக 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கரோனா மருந்து இந்தியாவில் அறிமுகமாகும் என்று பேச்சு எழுந்தது.

ஆனால், மருத்துவ வல்லுநர்கள், ஆய்வாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பிலிருந்து பின் வாங்கிய தடுப்பு மருந்து கொண்டுவர அதிகமான காலம் ஆகும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு, நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில் “ கடந்த 3 மாதங்களாக நிலைக்குழுக் கூட்டத்தை காணொலி மூலம் நடத்தக் கோரியிருந்தேன். ஆனால் கரோனா வைரஸ் பரவல் பிரச்சினையில் நடத்த முடியவில்லை.

இன்று நடந்த நிலைக்குழுவில் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றாலும், குறைந்த உறுப்பினர்களுடன் ஆக்கப்பூர்வமாக, சுவாரஸ்யமாக கூட்டம் நடந்தது. கரோனா வைரஸுக்கு இடையிலான கடினமான சூழலிலும் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதுபோன்ற கருத்துப்பரிமாற்றங்களில்தான் நமது ஜனநாயகம் வலுவடையும்.

இந்த கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும்தொழில்நுட்பத்துறை, உயிரிதொழில்நுட்பத்துறை, சிஎஸ்ஐஆர், அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்கள் தெரிவித்துள்ளபடி, இந்த ஆண்டுக்குள் கரோனா வைரஸுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கிடைக்காது. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் தடுப்பு மருந்துக்கான வாய்ப்பு இருக்கும். அது உள்நாட்டில் தயாரிக்கப்படுபவையாக இருக்கலாம், அல்லது உற்பத்தி செய்யப்படுபவையாக இருக்கலாம்.

மேலும், இந்த கூட்டத்தில் குறைந்த விலையில் மருத்துவ உபகரணங்களைக் கண்டுபிடிக்க அறிவுறுத்தினோம். குறிப்பாக வென்டிலேட்டர்களை ரூ.30 ஆயிரத்துக்குள் கண்டுபிடிக்க கோரினோம்” எனத் தெரிவித்துள்ளார்

இதற்குபதில் அளித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மார்ச் 23-ம் தேதிக்குப்பின் 3 மாதங்களுக்குப்பிறகு நாடாளுமன்ற நிலைக்குழு கூடியதை நான் வரவேற்கிறேன்.

அனைத்து உறுப்பினர்களும் தங்களின் கடமையைச் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால், சூழல், தாமதத்தை ஏற்படுத்திவிட்டது. சமூக விலகலுடன் அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்த சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்

வரும் 15-ம் தேதி உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x