Published : 10 Jul 2020 06:10 PM
Last Updated : 10 Jul 2020 06:10 PM
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை செய்வதாக கூறி போலி இணையதளங்கள் செயல்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பிரதமர் கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியான் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதாகக் கூறிக்கொள்ளும் மோசடி இணையதளங்களுக்கு எதிராக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் (எம்என்ஆர்இ) இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் குசும் திட்டத்திற்கான பதிவு செய்யப்பட்ட இணையதளம் என்று கூறிக்கொண்டு இரண்டு புதிய இணைய தளங்கள் செயல்படுவது தெரியவந்துள்ளது. இந்த இணைய தளங்கள் https://kusum-yojana.co.in/ and https://www.onlinekusumyojana.co.in/. இந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ள மோசடி பேர்வழிகள், இந்தப் போலி இணையதளங்கள் மூலமாக, பொதுமக்களை ஏமாற்றி இந்த இணையதளங்கள் மூலம் பெறப்படும் தரவுகளை தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த இணையதளங்களுக்குப் பின்னால் உள்ள மோசடிப் பேர்வழிகளுக்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம், இந்த இணையதளங்களில் எந்த விதமான தகவல்களையும் பதிவு செய்யவேண்டாம் என்றும், பணம் செலுத்துவதைத் தவிர்க்கும்படியும், பொதுமக்களுக்கும், இந்தத் திட்டத்தின் கீழான பயனாளிகளுக்கும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசுத் திட்டங்கள் தொடர்பாக பதிவு செய்வதற்கான இணையதளங்கள் குறித்த விவரங்களைப் பற்றி டிஜிட்டல் தளங்கள் மூலமாகவோ, அச்சு மூலமாகவோ வெளியிடுவதற்கு முன், அந்த இணையதளங்களின் உண்மைத் தன்மை குறித்து பரிசோதித்துப் பார்த்த பிறகு, அவை பற்றிய செய்திகளை, ஊடகங்களும், ஊடக வலைதளங்களும் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமர் குசும் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் 8.3.2019 அன்று எம்ஆர்இ அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் 22.7.2019 அன்று வெளியிடப்பட்டன. சூரிய சக்தி பம்புகள் அமைத்தல்; தற்போதுள்ள க்ரிட் தொடர்பு கொண்ட விவசாய பம்புகளை சூரிய சக்தி கொண்டவையாக மாற்றுதல்; க்ரிட் இணைப்பு கொண்ட புதுப்பிக்கக்கூடிய மின் ஆலைகள் நிறுவுதல்; ஆகியவற்றுக்கு இத்திட்டம் வகை செய்கிறது.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பிரதமர் குசும் திட்டத்தின் பதிவு செய்து கொள்ளக்கூடிய இணையதளங்கள் என்று கூறிக்கொண்டு சில இணையதளங்கள் உருவாகியுள்ளது கவனத்திற்கு வந்துள்ளது.
பொதுமக்களுக்கு இழப்பு எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்கனவே இது தொடர்பாக 18.3.2019 மற்றும் 3.6.2020 ஆகிய தினங்களில் எம்என்ஆர்இ அமைச்சகம் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. இதுபோன்ற இணைய தளங்களில் தங்களது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்; எந்த விதமான பதிவுக் கட்டணமும் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கும் பயனாளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனால் அனைத்து பங்குதாரர்களுக்கும் அமைச்சகத்தால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், பிரதமர் குசும் திட்டம், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள, திட்டத்தை செயல்படுத்தும் முகமைகளின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த முகமைகளின் விவரங்கள் எம் என் ஆர் இ அமைச்சகத்தின் இணையதளமான www.mnre.gov.in. ல் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அமைச்சகம் தனது இணையதளம் மூலமாகவோ வேறு எந்த இணையதளங்கள் மூலமாகவும் பயனாளிகளை நேரடியாக பதிவு செய்வது இல்லை.
எனவே பிரதமர் குசும் திட்டம் குறித்த எம்என் ஆர்இ பதிவு பெற்ற இணையதளம் என்று கூறிக்கொண்டு செயல்படும் இணைய தளங்கள் தவறான நோக்கத்துடன் செயல்படுபவை. மோசடியானவை. இதுபோன்ற மோசடி இணையதளங்கள் குறித்து சந்தேகம் இருந்தால், அது குறித்து எம்என்ஆர்இ அமைச்சகத்துக்குத் தெரிவிக்கலாம்.
இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான தகுதிகள் குறித்த செயல்பாட்டு வழிமுறைகள் குறித்தும், எம்என்ஆர்இ அமைச்சகத்தின் இணையதளத்தில் www.mnre.gov.in. குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆர்வமுடைய பொதுமக்கள் எம்என்ஆர்இ அமைச்சகத்தின் இணையதளத்தைக் காணலாம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 1800-180-3333 தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT