Last Updated : 10 Jul, 2020 04:51 PM

1  

Published : 10 Jul 2020 04:51 PM
Last Updated : 10 Jul 2020 04:51 PM

தங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் வழக்கு: கேரள உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

ஸ்வப்னா சுரேஷ் : கோப்புப்படம்

கொச்சி

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவரும், தேடப்பட்டு வரும் நபரான ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் தேசிய விசாரணை முகமை(என்ஐ) தெரிவித்துள்ளது.

தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தநிலையில் அந்த மனுமீதான இன்றைய விசாரணையின்போது என்ஐஏ இந்த வாதத்தை தெரிவித்தது

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாகக் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எடுத்துச் செல்ல முயன்ற பார்சலை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடியாகும்.

இந்தப் பார்சலை வாங்குவதற்காக வந்திருந்த சரித் குமார் என்பவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவருமான ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தத் தகவலையடுத்து, ஸ்வப்னாவை போலீஸார் கைது செய்யத் தேடி வருகின்றனர். ஆனால், ஸ்வப்னா தலைமறைவாக இருந்து வருகிறார் இந்நிலையில் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், என்ஐஏ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் மேனன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது என்ஐஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் “ தங்கம் கடத்தல் வழக்கு இப்போதுதான் ஆரம்பகட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் பல சாட்சியங்களை அழிக்கலாம். ஆதலால், ஜாமீன் வழங்குவது சரியல்ல.

தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, தூதரகத்தின் ஆவணங்கள் மூலம் தங்கம் கடத்தல் செய்ய முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. ஆதலால் ஸ்வப்னா சுரேஷை காவலில் எடுத்து விசாரித்து கடத்தலில் அவரின் பங்கு என்ன என்பதை விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

அப்போது ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், என்ஐஏ எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளது என்பதை இதுவரை தெரியாததால், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் மனுதாரருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி அசோக் மேனன் விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

ஸ்வப்னா சுரேஷ் தூதரக ஆவணங்களைப் பயன்படுத்தி தங்கம் கடத்தலுக்கு முயன்றதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ தீவிரமாக இருப்பதால், அவருக்கு முன்ஜாமீன் கிடைப்பது சுலபமல்ல என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x