Published : 10 Jul 2020 12:36 PM
Last Updated : 10 Jul 2020 12:36 PM
உத்தரப்பிரதேசம் கான்பூரில் 8 போலீஸாரைக் கொலை செய்த ரவுடி கும்பலின் தலைவன் விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார், அவரைப் பாதுகாத்தவர்களை உ.பி. அரசு என்ன செய்யப்போகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளனர்
கான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றனப். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது
இந்த வழக்கில் ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அக்னி ஹோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸ் துபே உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே, பிரபாத் மிஸ்ரா ஆகியோரும் போலீஸார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனி போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
உ.பி. போலீஸார் விகாஸ் துபேயை விசாரணைக்காக கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது கடும்மழையால் துபே வந்த கார் கவிழ்ந்தபோது, அதிலிருந்து தப்பிக்க விகாஸ் துபே முயன்றார். அப்போது போலீஸார் சுட்டதிில் விகாஸ் துபே கொல்லப்பட்டார். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.
இந்நிலையில் ரவுடி விகாஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உ.பி. அரசை விமர்சித்துள்ளார்.
பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கிரிமினல் கொல்லப்பட்டுவிட்டார், அவரைப் பாதுகாக்க முயன்றவர்களையும், குற்றவாளி செய்த குற்றத்தையும் அரசு என்ன செய்யப்போகிறது. கான்பூர் போலீஸார் கொல்லப்பட்ட வழக்கை கையாளுவதில் ஆளும் பாஜக அரசு முற்றிலும்தோல்வி அடைந்துவிட்டது” என விமர்சித்துள்ளார்
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ உண்மையில் கார் கவிழவில்லை. உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடாமல் தடுக்கவும், அரசை காக்கவும் கவிழ்க்கப்பட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT