Published : 10 Jul 2020 10:09 AM
Last Updated : 10 Jul 2020 10:09 AM
உத்திரப்பிரதேச போலீஸாரின் என்கவுண்டரில் ரவுடி விகாஸ் துபே இன்று பலியாகி உள்ளார். முன்னதாக நேற்று உஜ்ஜைனில் சிக்கியவருக்கு கார் அளித்து உதவியதாக மத்தியப்பிரதேச காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கான்பூரின் துப்பாக்கி சூட்டில் 8 போலீஸாரை பலியாக்கிய ரவுடி விகாஸ் துபே நேற்று காலை ம.பியின் உஜ்ஜைனில் கைதானார். இதையடுத்து உபி அதிரடிப் படையினரால் கான்பூர் கொண்டு வரப்பட்டவர் வழியில் தப்ப முயன்ற போது கொல்லப்பட்டார்.
இதற்கு முன்னதாக, மஹாகாலபைரவர் கோயில் வரை கார் அளித்ததுடன் பல்வேறு உதவிகள் செய்ததாக ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பியின் கான்பூரை பூர்வீகமாகக் கொண்ட ஆனந்த் கடந்த 20 வருடங்களாக உஜ்ஜைனில் வசிக்கிறார்.
இங்குள்ள ஒரு மது தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளரான ஆனந்திற்கு விகாஸ் துபேயுடன் நட்பு இருந்துள்ளது. கடந்த பல வருடங்களாக உஜ்ஜைனின் மஹாகாலபைரவர் கோயிலுக்கு வந்து செல்லும் ரவுடி விகாஸை ஆனந்த் சந்தித்து பேசுவதும் தொடர்ந்துள்ளது.
இதனால், ஆனந்திற்கு போன் செய்த விகாஸ் துபே தனது உஜ்ஜைன் வருகைக்கு உதவும்படி கேட்டிருப்பது மபி காவல்துறையின் விசாரணையில் தெரிந்துள்ளது.
இதையடுத்து, உஜ்ஜைனின் நகிஹிரி பகுதிவாசியான ஆனந்த் மபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று விகாஸ் மஹாகாலபைரவர் கோயிலில் சிக்கிய போது ஆனந்தும் உடன் இருந்தாரா? இல்லையா? என்பது தெளிவாகவில்லை.
விகாஸுக்கு உதவ உபி உயர்நீதிமன்ற லக்னோ அமர்வின் ஒரு வழக்கறிஞரின் எண் UP32 KS 1104 விதாரா பிரீஜா காரை ஆனந்த் அனுப்பி வைத்துள்ளார். இந்த காரில் பரீதாபாத்தில்
இருந்து விகாஸ் வந்தாரா? அல்லது உஜ்ஜைன் வந்த பின் அதை பயன்படுத்தினாரா? என்பதும் வெளியாகவில்லை.
எனினும், அந்த காரின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரான வழக்கறிஞரையும் மபி காவல்துறை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதன் முழுவிவரம் இன்று வெளியாகும் நிலையில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT