Published : 10 Jul 2020 09:19 AM
Last Updated : 10 Jul 2020 09:19 AM
’நான் தான் கான்பூர்வாலா விகாஸ் துபே! என்னை பிடியுங்கள்!’ என உஜ்ஜைனின் மஹாகாலபைரவர் கோயிலில் நுழைந்து கூச்சலிட்ட விகாஸ் துபே இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுபோல், உ.பி. போலீஸாரின் குண்டுகளால் உயிர் தப்பவேண்டி அவர் நேற்று சரணடைந்தது வீணாகி விட்டதாகக் கருதப்படுகிறது.
கான்பூரில் ஜூன் 2 நள்ளிரவு ரவுடி விகாஸ் துபேயை பிடிக்கச் சென்ற போலீஸாரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து உபியின் முக்கியக் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர் தலைக்கு ரூ.25,000 இல் இருந்து ரூ.5 லட்சமாகப் பரிசு அறிவிக்கப்பட்டது.
அப்போது முதல் கான்பூர் போலீஸாருடன் இணைந்து உபியின் அதிரடிப் படையினன் அறுபதிற்கும் மேற்பட்ட குழுக்கள் விகாஸை தீவிரமாகத் தேடினர். இவரது வலதுகரமான அமர் துபே உள்ளிட்ட 3 சகாக்களும் உபி போலீஸாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் பரீதாபாத்தில் பிடிபட்ட பிரபாத் மிஸ்ரா நேற்று விடியலில் கான்பூர் வரும்போது வழியில் கொல்லப்பட்டார். அவர் தப்பிச் செல்ல முயன்ற போது சுடவேண்டி வந்ததாக கான்பூர் போலீஸார் தெரிவித்தனர்.
இதேபோல், மூன்றாவது சகாவான ரண்பீரை கான்பூர் ஊரகப் பகுதியில் பிடிபடும் போது நேற்று விடியலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுபோல், தானும் உபி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவோம் என விகாஸ் துபே தொடர்ந்து அஞ்சி வந்தார்.
இதனால், தன் வழக்கறிஞர்களுடன் நான்கு ஆலோசனை செய்து மபியின் உஜ்ஜைனில் சரணடைய விகாஸ் திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது. இதற்கு ஆதாரமாக நேற்று உஜ்ஜைனில் விகாஸிடம் காணப்பட்ட நடவடிக்கைகள் சுட்டிக் காட்டப்பட்டன.
உஜ்ஜைனின் மஹாகாலபைரவர் கோயிலின் தீவிர பக்தரான விகாஸ் அங்கு வந்தபோது பல கோணங்களில் படம் எடுக்கப்பட்டன. இதை எடுத்தது பத்திரிகையாளரா? அல்லது விகாஸின் உடன் வந்தவரா? என்பது வெளியாகவில்லை.
கோயிலின் விவிஐபிக்கான ரூ.250 கட்டண அனுமதிச்சீட்டு பெற தனது கைப்பேசியின் உண்மையான எண் மற்றும் பெயரை எழுதியுள்ளார் விகாஸ். கோயிலின் தரிசனத்தை முடித்தவர், ‘நான் தான் கான்பூர்வாலா விகாஸ் துபே! என்னை பிடியுங்கள்!’ எனக் நாலாபுறமும் திரும்பி கூச்சலிட்டதாகத் தகவல்கள் வெளியானது.
அதன் பிறகு அங்கு அடையாளம் காணப்பட்ட ரவுடியான விகாஸிடம் விசாரணை செய்த கோயில் காவலர் லக்கன் யாதவிடம் அமைதியாக பதில் அளித்துள்ளார். பிறகு அக்காவலர் லக்கன், விகாஸ் மீதான தகவல்களை கோயில் நிர்வாகிகளுக்கும் கைப்பேசியில் தெரிவித்தது வரையும் கூட அமைதி காத்துள்ளார்.
அதில் அறிவுறுத்தப்பட்டதன் பேரில் அடம்பிடிக்காமல் துப்பாக்கியும் இல்லாத காவலருடன் அமைதியாக நடந்து சென்றுள்ளார் விகாஸ். இங்கிருந்து தப்பிச்செல்லவும் முயற்சிக்காதவரின் சரண் உஜ்ஜைனில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.
கடைசியாக ஹரியானாவின் பரீதாபாத்தில் காணப்பட்ட விகாஸ், உபி போலீஸாரிடம் சிக்காமல் ராஜஸ்தானில் நுழைந்து கோட்டா வழியாக உஜ்ஜைன் அடைந்துள்ளார். இவரது கைது சம்பவத்திற்கு பின் மஹாகாலபைரவர் கோயிலில் விகாஸை பிடித்த காவலர் லக்கன் யாதவ், நீண்ட விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளார்.
அக்கோயில் பகுதி காவல்நிலையத்தின் ஆய்வாளரான பிரகாஷ் வஸ்கலும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களை வைத்து கொல்லப்பட்ட டிஎஸ்பியான தேவேந்திர மிஸ்ராவின் சகோதரர் கமலகாந்த் மிஸ்ரா, ‘இது கைது அல்ல. மரணத்தில் இருந்து விகாஸ் காக்கப்பட்டதாகக் கூறி இருந்தார்.
எனினும், விகாஸின் அச்சம் உண்மையாகும் விதத்தில் இன்று காலை 7.15 மணிக்கு உபி போலீஸாரால் அவர் சுடப்பட்டுள்ளார். இந்த பலியால் விகாஸுடன் சம்மந்தப்பட்ட
அரசியல்வாதிகள் மற்றும் உபியின் சில போலீஸார் பெயர்களும் வெளியாவது கேள்விக்குறியாகி விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT