Last Updated : 10 Jul, 2020 09:03 AM

21  

Published : 10 Jul 2020 09:03 AM
Last Updated : 10 Jul 2020 09:03 AM

பிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: கான்பூர் சென்றபோது வழியில் தப்ப முயன்றதால் நடவடிக்கை

புதுடெல்லி

மத்தியபிரதேச மாநிலத்தில் கைதான 23 மணி நேரத்தில் ரவுடி விகாஸ் துபே இன்று விடியலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சாலை வழியாக வந்தவர் தப்ப முயன்ற போது உத்தரப் பிரதேச போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

கான்பூரின் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிய ரவுடி விகாஸ் துபே நேற்று ம.பி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள உஜ்ஜைனின் பழம்பெரும் மஹாகாலபைரவர் கோயிலில் தரிசனம் முடித்த விகாஸ் காலை 8.00 மணிக்கு சிக்கினார்.

இதை தொடர்ந்து உஜ்ஜைனில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து ரவுடி விகாஸிடம், மத்திய பிரதேச போலீஸார் 10 மணி நேரம் விசாரணை செய்தனர். பிறகு காணொலிக்காட்சிகள் மூலம் விகாஸ் உஜ்ஜைன் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனிடையே, உஜ்ஜைனில் ரவுடி விகாஸ் சிக்கிய தகவலறிந்த கான்பூர் காவல்துறையினர் உ.பியின் அதிரடிப் படையுடன் மத்தியப் பிரதேசம் வந்தனர். பிறகு அவர்களும் காணொலிகாட்சி மூலம் விகாஸ் துபேயை ‘டிரான்ஸிட் ரிமாண்ட்’ மூலம் தன் பொறுப்பில் கொண்டு வந்தனர்.

இது குறித்து உ.பி.யின் ஏடிஜியான பிரஷாந்த் குமார் கூறும்போது, ‘மபியில் இருந்து விகாஸை கொண்டுவர உபியின் அதிரடிப் படை சென்றுள்ளது. விகாஸிடம் விசாரணை செய்து அவரது குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் அனைவரையும் வெளிக்கொண்டு வரும் வரை நாம் ஓய மாட்டோம்.’ எனத் தெரிவித்திருந்தார்.

விகாஸ் துபேயுடன் உ.பி படை நேற்று இரவு சுமார் 10.00 மணிக்கு விகாஸ் உஜ்ஜைனில் இருந்து சாலை வழியாக கான்பூர் கிளம்பியது. சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் உ.பியின் அதிரடிப் படையினர் பின்தொடர்ந்தனர்.

இந்நிலையில், உ.பியின் கான்பூருக்கு சற்று தொலைவு முன்பாக இருக்கும் எனும் இடத்தில் விகாஸ் துபேயை அழைத்து வந்த வாகனம் சாலையில் தடுமாறி கவிழ்ந்துள்ளது. அப்போது போலீஸாரிடம் துப்பாக்கியை பிடுங்கித் சுட்டுவிட்டு விகாஸ் தப்ப முயன்றதாகக்க் கூறப்பட்டுள்ளது.

இதனால், அங்கிருந்த உ.பியின் அதிரடி படையினரால் விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விகாஸ், கான்பூரின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் விகாஸின் உயிர் பிரிந்ததை உறுதி செய்தனர். காலை 7.15 மணி சுமாருக்கு திடீஎ எனக் கொட்டும் மழைக்கு இடையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், உபி போலீஸாரால் தான் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சம் விகாஸுக்கு தொடர்ந்து இருந்தது.

இந்தச் சம்பவத்தில் உ.பி. யின் ஒரு சில போலீசாருக்கு துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது, இவர்கள் கான்பூரில் வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வழியில் வந்த சுங்கச் சாவடிகளில் விகாஸுடன் உ.பி படை சேர்வதற்கு அரை மணி நேரம் முன்பாக பொதுமக்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாடுகளை உ.பி அதிரடிப் படையினர் செய்திருந்தனர்.

தம் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த விகாஸ் துபே உபியின் கிரிமினல்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். இதனால், அவரை உஜ்ஜைனில் இருந்து தனிவிமானத்தில் கான்பூர் அழைத்துவர திட்டமிடப்பட்டிருந்தது.

இன்று விடியலில் 3.00 மணிக்கு வழியில் ஜான்சி அடைந்தவர்கள் தொடர்ந்து கான்பூர் பயணித்தனர். இவர்கள் இன்று காலை சுமார் 9.00 மணிக்கு கான்பூர் வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன் பிறகு கானொலிக்காட்சி மூலம் கான்பூர் நீதிமன்றத்தில் விகாஸ் துபே ஆஜர்படுத்தப்பட இருந்தார். அதில், விசாரணக்காக வேண்டி விகாஸ் துபேயை கான்பூர் போலீஸார் காவலில் எடுக்க இருந்தனர்.

இதன் விசாரணையில் விகாஸின் தொடர்பில் இருந்த உ.பியின் போலீஸார் மற்றும் அரசியல்வாதிகளின் பலரது பெயர்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள் விகாஸ் துபே இன்று வழியிலேயே பலியாகி உள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x