Last Updated : 10 Jul, 2020 08:12 AM

1  

Published : 10 Jul 2020 08:12 AM
Last Updated : 10 Jul 2020 08:12 AM

உ.பி.யில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: மாநிலம் முழுவதிலும் இன்று இரவு முதல் 2 நாள் ’லாக்டவுன்’

லக்னோ

மீண்டும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உத்திரப்பிரதேசத்தில் மீண்டும் ‘லாக்டவுன்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி முதல் திங்கள் காலை 5.00 வரை 2 தினங்களுக்கு அமலில் இருக்கும்.

இது குறித்த உத்தரவை உ.பி.யின் தலைமை செயலாளரான ஆர்.கே.திவாரி வெளியிட்டுள்ளார். அதில், இந்த லாக்டவுன் உபி மாநிலம் முழுவதிலும் தீவிரமாக அமல்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், தனியார் மற்றும் பொது வாகனங்கள் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்து கடைகள், வீடுகளில் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி உண்டு.

இதன் பணியாளர்கள் தம் அடையாள அட்டைகளை காண்பித்து விட்டு சென்று வரலாம். அதேபோல், பன்னாட்டு விமானங்கள் மற்றும் ரயில் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பயணிகள் தம் வீடு சேர அரசு போக்குவரத்து பேருந்துகள் மட்டும் செயல்படும். ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், நகர்ப்புறங்களின் தொடர் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தனது உத்தரவில் உபி தலைமை செயலாளரான ஆர்.கே.திவாரி மேலும் கூறுகையில், ‘இந்த லக்டவுன் போது அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மாநிலம் முழுவதிலும் ரோந்து சென்று பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கரோனா பரவல் தடுப்பிற்கான இந்த அரசு உத்தரவு முறையாக அமலாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக

பொது அறிவிப்பு முறையை அரசு அதிகாரிகள் கையாள வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உபியின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் கரோனா பரவலை தடுக்க தனிப்பட்ட முறையில் பல்வேறு வகை லாக்டவுன் நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதில், காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி விற்பனைக்கு தொடர்ந்து அன்றாடம் காலை 11.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களாக உபியில் திடீர் எனக் கரோனா வைரஸ் பரவல் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 1000 அதிகரித்துள்ளது. இதன்மூலம், உபியின் மொத்த தொற்று எண்ணிக்கை நேற்று வரை 32,681 எனவும் பலி 862 என்றும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x