Published : 09 Jul 2020 07:53 PM
Last Updated : 09 Jul 2020 07:53 PM

கேரளாவில் பரபரப்பைக் கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ் யார்? 30 கிலோ தங்கம் கடத்தலில் முன்ஜாமீன் தாக்கல் 

ஸ்வப்னா சுரேஷ் : படம் உதவி ட்விட்டர்

திருவனந்தபுரம்

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தலில் முக்கிய நபராகத் தேடப்பட்டுவரும் ஸ்வப்னா சுரேஷ் முன் ஜாமீன் கோரி திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி 30 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்த பார்சலைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பார்சலை வாங்குவதற்காக வந்திருந்த சரித் குமார் என்பவரை சுங்கத்துறையினர் மற்றும் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவருமான ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தத் தகவலையடுத்து, ஸ்வப்னாவை போலீஸார் கைது செய்யத் தேடி வருகின்றனர். ஆனால், ஸ்வப்னா தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த விவகாரம் கேரள அரசியலிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் சார்பில் முன்ஜாமீன் கோரி இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் ஸ்வப்னா சுரேஷ் கூறுகையில், “கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தி விமான நிலையத்தில் பிடிபட்ட வழக்கில் போலீஸார் தேவையின்றி எனது பெயரைச் சேர்த்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரி ராஷித் காமிஸ் அல் ஷாமேலி உத்தரவின் பெயரில்தான் திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரியிடம் அந்த பார்சல் குறித்து விசாரித்தேன்.

ஐக்கிய அரபு அமீரகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கடந்த 1-ம் தேதியிலிருந்து பணியாற்றி வருகிறேன். தூதரகப் பொறுப்பு அதிகாரி அலுவலகத்துக்கு வர வேண்டிய பார்சல் வரத் தாமதமாகியுள்ளதால் அதுகுறித்து விசாரிக்க என்னிடம் கூறியிருந்ததால், நான் விசாரித்தேன்.

நான் எனது இரு குழந்தைகள், கணவருடன் மிகவும் கவுரவமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எந்தவிதமான கிரிமினல் செயல்பாடுகளுடனும் தொடர்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

கேரளா மாநிலத்தில் பரபரப்புக்குள்ளாகி வரும் 30 கிலோ தங்கக் கடத்தலில் முக்கியமாகத் தேடப்பட்டுவருபவர் ஸ்வப்னா சுரேஷ். அபுதாபியில் பிறந்து, படித்து அங்கேயே வளர்ந்தவர் ஸ்வப்னா சுரேஷ். அபுதாபியில் படித்ததால் அரபு மொழியைச் சரளமாகப் பேசக்கூடியவர்.

மேலும் பிறப்பில் மலையாளி என்பதால், மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் மிகவும் சரளமாக உரையாடும் திறமை படைத்தவர்.

ஸ்வப்னா சுரேஷ் பூர்வீகம் திருவனந்தபுரம் அருகே இருக்கும் பலராமபுரம். அபுதாபியிலிருந்து வந்தபின் பலராமபுரத்தில் ஒரு டிராவல் ஏஜென்சியில் ஸ்வப்னா பணியில் சேர்ந்தார்.

அதன்பின் 2013-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தில் மனிதவளத் துறையில் நிர்வாகியாகப் பணியில் சேர்ந்தார். இந்தப் பணியில் ஸ்வப்னா சுரேஷ் இருந்தபோது உயர் அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மீது போலியாக பாலியல் புகார் அளித்தார்.

அந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரித்தபோது அது போலியான புகார் எனத் தெரியவந்தது. இதேபோன்று 17 புகார்களைப் போலியான பெயரில் ஸ்வப்னா சுரேஷ் அந்த அதிகாரிக்கு எதிராக அளித்ததும் தெரியவந்தது.

ஆனால் தனது செல்வாக்கைப் பயன்படுத்திய ஸ்வப்னா சுரேஷ், விசாரணையைத் திசைதிருப்பிவிட்டார். கடந்த மாதம் கூட இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணைக்கு ஸ்வப்னாவை நேரில் ஆஜராக அழைத்தனர். ஆனால், அரசியல் வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் செல்வாக்குடன் இருந்ததால் ஸ்வப்னாவை வழக்கிலிருந்து போலீஸார் விடுவித்தனர்.

ஏர் இந்தியாவிலிருந்து வேலையை ராஜினாமா செய்த ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் அபுதாபிக்குச் சென்றார். அதன்பின் மீண்டும் 2016-ம் ஆண்டு திருவனந்தபுரம் வந்து அங்குள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒப்பந்த அடிப்படையில் செயலாளராகப் பணியில் சேர்ந்தார்.

சரளமாக அரபு மொழி, மலையாளம், ஆங்கிலம் , இந்தி ஆகியவற்றை ஸ்வப்னா பேசியதால், கேரள அரசு அதிகாரிகள் மட்டத்தில் விரைவில் பழகி நல்ல நட்புறவை ஸ்வப்னா ஏற்படுத்திக்கொண்டார். ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு முன் ஸ்வப்னா சுரேஷ் மீது முறைகேடு புகார் வந்ததையடுத்து, ஐக்கிய அரபு அமீரகப் பணியிலிருந்து விலகினார். ஆனால், இவர் விலகவில்லை, நீக்கப்பட்டார் என்ற தகவலும் கூறப்படுகிறது.

அதன்பின் தனக்கிருந்த அரசியல் செல்வாக்கில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வர்த்தக மேம்பாட்டு மேலாளராக ஒப்பந்த அடிப்படையில் ஸவப்னா பணியில் சேர்ந்தார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலரும் கேரள முதல்வரின் தனிச் செயலாளருமான சிவசங்கரனுக்கு கீழ் பணியாற்றிய ஸ்வப்னா குறுகிய நாளிலேயே அவருடன் நெருக்கமானார்.

ஸ்வப்னா சுரேஷின் வீட்டுக்கு சிவசங்கரன் வந்து செல்லும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக மாறினார் என்று கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஸ்வப்னா சுரேஷுக்குத் திருமணமாகி கணவரும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்டு பிடிபட்டபோது, அதில் முக்கிய நபராகவும், தேடப்படுவராகவும் ஸ்வப்னா சுரேஷ் மாறியுள்ளார்.

கேரள ஐ.டி.பிரிவின் வர்தத்க மேலாளராக இருந்துவரும் ஸ்வப்னா சுரேஷ், அந்தத் துறையின் செயலாளர் சிவசங்கரனுக்கு நெருக்கமானவர் என்பதால், தகவல் தொழில்நுட்பச் செயலாளராக இருக்கும் சிவசங்கரனிடம் அந்தப் பதவியை கேரள அரசு பறித்தது.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலாளராகவும் கூடுதலாகப் பதவி வகித்து வந்தார் சிவசங்கரன். அந்தப் பதவியும் பறிக்கப்பட்டது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x