Published : 09 Jul 2020 05:48 PM
Last Updated : 09 Jul 2020 05:48 PM
கரோனாவுக்கு மேலும் ஒரு தடுப்பு மருந்து சோதனை அளவில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.
கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின. இந்தநிலையில் இதேபோன்று மேலும் ஒரு தடுப்பு மருந்து சோதனை அளவில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
‘‘உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது. உலக அளவில் தற்போது 100 தடுப்பு மருந்துகள் ஆய்வு நிலையில் உள்ளன. இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. இது முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சியில் நடைபெறுகிறது.
ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் ஒரு தடுப்பு மருந்தையும், காடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு மருந்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுமே முறையான ஆய்வுக்குட்படுத்தி விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்தவதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளன. மருத்துவ சோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உரிய அனுமதி வழங்கியுள்ளார். ’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT