Published : 09 Jul 2020 04:47 PM
Last Updated : 09 Jul 2020 04:47 PM
கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால், அல்லது இந்தியாவுக்கு கிடைக்காவிட்டால் 2021-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்தியாவில் நாள்தோறும் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் மசாசூட்டஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த ஆய்வு கரோனாவின் அபாயத்தைச் சுட்டிக்காட்டுபவை மட்டும்தான். எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய துல்லியமானவை அல்ல. காரணிகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆய்வறிக்கை குறித்து இதுவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ அல்லது ஐசிஎம்ஆர் அமைப்போ எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் மசாசூட்டஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்கள் ஹசிர் ரஹ்மான்தத், ஜான் ஸ்டெர்மான் மற்றும் ஆராய்ச்சி மாணவர் சே யாங் லிம் ஆகியோர் இந்த ஆய்வைச் செய்துள்ளனர். 84 நாடுகளில் இருந்து நம்பகத்தன்மையான 475 கோடி மக்களின் கரோனா பரிசோதனை புள்ளிவிவரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
''இதில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2021-ம் ஆண்டின் குளிர்காலத்தின் முடிவில் அதிக அளவில் பாதிக்கப்படும் முதல் 10 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளோம்.
அதில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில் நாள்தோறும் 2.87 லட்சம் மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்து அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், இந்தோனேசியா, பிரிட்டன், நைஜீரியா, துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை பாதிக்கப்படலாம்.
இந்தக் கணிப்புகள் அனைத்தும் ஒவ்வொரு நாடும் கரோனாவை அணுகும் முறை, தடுக்க வகுத்துள்ள கொள்கைகள், பரிசோதனை அளவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டவை. இந்த ஆய்வு அறிக்கை என்பது கரோனாவில் வரப்போகும் இடர்களையும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுபவை மட்டும்தான். எதிர்காலத்தின் நிகழ்வுகளைப் பற்றிய துல்லியமான கணிப்புகள் அல்ல.
ஒவ்வொரு நாடும் கரோனா பரிசோதனையின் அளவைத் தொடர்ந்து அதிகப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் கரோனா நோயாளிகள் புதிதாக அதிக அளவில் உருவாவதைத் தடுக்க முடியும்.
அதேசமயம், கரோனாவுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டுவது, இடர்களை கண்டுகொள்ளாமல் விடுவது போன்றவை பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும்.
எதிர்காலப் பரிசோதனை மற்றும் முடிவுகள் அடிப்படையில் கூடுதல் ஆய்வுகளைச் செய்வதன் மூலம், எதிர்காலப் போக்கு குறித்து மாதிரிகள் மூலம் தெரிவிக்க முடியும். மூன்று அடிப்படை விஷயங்களை ஆய்வுக்கு எடுத்துள்ளோம். முதலாவது ஒரு நாடு செய்யும் கரோனா பரிசோதனை அளவுகள், அதன் எதிர்வினையையடுத்து அந்நாடு நகரும்போக்கு, இரண்டாவதாக பரிசோதனையை அதிகப்படுத்தும்போது நடக்கும் சாத்தியங்கள், மூன்றாவது பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருப்பவர்களைக் கண்டறிதலாகும்''.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளரும் பேராசிரியருமான ஹசிர் ரஹ்மான்தத் கூறுகையில், “எங்களின் மாதிரிகள் கரோனா வைரஸ் பரவுதல், அதன் வளர்ச்சி, மக்கள் எவ்வாறு கரோனாவை எதிர்கொள்கிறார்கள், எத்தனை பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள், எத்தனை பேர் பரிசோதனை செய்யப்படுகிறார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, இறப்புகளின் எண்ணிக்கை, இடர்கள் அதிகரிக்கும்போது மக்களின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றம் போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டன.
அறிக்கைகளில் இருக்கும் எண்ணிக்கையை விட உண்மையான கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகப் பெரிது. தற்போதைய கரோனாவிலிருந்து வெளியேறுவதற்கு ஹெர்ட் இம்யூனிட்டிக்காக (மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்காக) காத்திருப்பது சாத்தியமான பாதை அல்ல” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT