Published : 09 Jul 2020 01:55 PM
Last Updated : 09 Jul 2020 01:55 PM
முக்கிய ரவுடியான விகாஸ் துபே இன்று மத்தியப்பிரதேச மாநில போலீஸாரிடம் சிக்கியதால் உ.பி காவல்துறைக்கு தர்மசங்கடம் உருவாகி உள்ளது. இதன் மீது காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளர் பிரியங்கா வத்ரா உ.பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தன்னை பிடிக்க வந்த கான்பூர் போலீஸாரில் 8 உயிர்களை பலியாக்கி தப்பியவர் விகாஸ் துபே. நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் உபி போலீஸாருக்கு பெரும் சவாலானது.
இதனால், விகாஸின் தலைக்கு ரூ.25,000 என்றிருந்த பரிசை ரூ.5 லட்சமாக உயர்த்தினர். கான்பூர் போலீஸ் மற்றும் உபி அதிரடிப் படையின் அறுபதிற்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்து விகாஸை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை மபி மாநிலம் உஜ்ஜைன் வந்த விகாஸ் அங்குள்ள மஹாகாலபைரவர் கோயிலில் சிக்கியுள்ளார். இங்கு அவரை கைது செய்த பெருமையை உபியிடம் இருந்து மபி போலீஸார் தட்டிப் பறித்துள்ளனர்.
இதனால், உ.பி போலீஸார் விகாஸின் மபி கைதால் பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகி விட்டது. இத்துடன் விகாஸ் பரீதாபாத்தில் இருந்து மபி சென்றதும் உபி போலீஸாருக்கு நெருக்கடியை உருவாக்கி விட்டது.
ஏனெனில், பரீதாபாத்தில் இருந்து ம.பியின் உஜ்ஜைன் சுமார் 770 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு சாலை வழியாக வாகனம் மூலம் அடைய குறைந்தது 14 மணி நேரம் பிடிக்கும்.
வழியில் டெல்லி, உ.பி மற்றும் மபி போலீஸாரின் சோதனை சாவடிகளையும் விகாஸுக்கு கடக்க நேரிட்டிருக்கும். இந்த சூழலில் விகாஸ் எந்த பிரச்சனையும் இன்றி தப்பி வந்தது எப்படி? என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மீது பிரியங்கா ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ’கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கான்பூர் சம்பவக் குற்றவாளியை பிடிப்பதில் உ.பி அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. முழுமையான எச்சரிக்கை சூழல் நிலவியபோதும் குற்றவாளி விகாஸ் உஜ்ஜைன் வரை சென்றது பாதுகாப்பு குறைபாட்டுடன் அவருடன் இருந்த ரகசியத் தொடர்பும் வெளியாகி உள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
உ.பியின் முக்கியரவுடியான விகாஸை கைது செய்த மபி போலீஸாருக்கு பாராட்டுகளும் குவிகின்றன. இதன் மீது பிஹார் மாநில டிஜிபியான கேசவ் பிரசாத் மவுரியாவும் ம.பி போலீஸாரை வாழ்த்தியுள்ளார்.
அதில் டிஜிபி மவுரியா கூறும்போது, ‘துபேயை பிடிக்க உபி போலீஸார் மிகவும் பணி பக்தியுடன் செயல்பட்டனர். இதனால், வேறு எந்த வழியையும் மீதம் வைக்காத உபி போலீஸாருக்கு அஞ்சி விகாஸ் வேறு மாநிலம் தப்பியுள்ளார். இதில், உபி போலீஸாருக்கும், மபி அரசிற்கும் வாழ்த்துக்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விகாஸின் கைதை அடுத்து செய்ய வேண்டியது குறித்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று காலை தனது காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், பரீதாபாத்தில் இருந்து உபி வழியாக மபிக்கு விகாஸ் தப்பியது எப்படி என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இக்கூட்டத்தில் விகாஸை தனிவிமானத்தில் உபி கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உபியின் கான்பூர் போலீஸார் மபியின் உஜ்ஜைனுக்கு விரைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT