Published : 09 Jul 2020 08:17 AM
Last Updated : 09 Jul 2020 08:17 AM
எல்லை நிலவரம் தொடர்பாக இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் இந்த வார இறுதியில் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
கடந்த மே மாத தொடக்கத்தில் இமயமலையின் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
கடந்த ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கின் பி14 பகுதியில் இரு தரப்பு ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்தன. போர் பதற்றம் அதிகரித்தது. கடந்த 30-ம் தேதி இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் பதற்றத்தை தணிக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லைக்கு நேரடியாக சென்றார். அங்கு ராணுவவீரர்கள் மத்தியில் உரையாற்றினார், காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். எந்த வல்லரசுக்கும் இந்தியா அடிபணியாது என்றுமறைமுகமாக சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே டிக்டாக் உள்ளிட்ட59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சில நாட்களுக்கு முன்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் , சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் 2 மணி நேரம் வீடியோ அழைப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் எல்லையில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது.
கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்களிடையே மோதல்நடைபெற்ற பி14 பகுதியிலிருந்து சீன வீரர்கள் வெளியேறி உள்ளனர். அந்தப் பகுதி முழுமையாக இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. ஹாட் ஸ்பிரிங்ஸ் பி15 பகுதியில் இருந்தும் சீன வீரர்கள் பின்வாங்கியுள்ளனர். இந்தப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பின்னோக்கி சென்றுள்ளனர்.
கோக்ரா 17ஏ பகுதியில் சீன ராணுவ வீரர்கள் வெளியேறத் தொடங்கி உள்ளனர். இன்று மாலைக்குள் அங்கிருந்து சீனவீரர்கள் முழுமையாக வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிங்கர் பகுதிகள் மற்றும் பான்கோங் ஏரி பகுதியிலும் சீன வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. எல்லை நிலவரம் குறித்து இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் இந்த வார இறுதியில் மீன்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, "கிழக்கு லடாக் எல்லையில் இருந்து சீன வீரர்கள் வெளியேறி வருகின்றனர். எனினும் முப்படைகளும் எதற்கும் தயார் நிலையில் உள்ளன. எல்லையில் போர் ஒத்திகையும் நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT