Published : 09 Jul 2020 08:08 AM
Last Updated : 09 Jul 2020 08:08 AM
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் படி அந்நாட்டிடம் உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா.வில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த கலந்துரையாடல் காணொலி மூலம் நடைபெற்றது.
இதில் இந்திய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சக இணைச் செயலர் மஹாவீர் சிங்வி கலந்து கொண்டு கூறியதாவது:
பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக இருப்பதை அனைத்து உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டது ஏன் என்பதை பாகிஸ்தான் சிந்திக்க வேண்டும்.
கரோனாவை ஒழிக்க உலகம் ஒன்றிணைந்து செயல்படுகிறது. ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்து இந்தியாவுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது.
ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் ஆதாரமற்ற பொய்த்தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருகிறது. இந்திய எல்லையில் பயங்கரவாதிகள்க்கு ஆதரவாக நிதி தளவாடங்களை வழங்குவதுடன் அதைச் சுதந்திரப் போராட்டமாக சித்தரிக்க முயல்கிறது. பேரழிவு தரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை பாகிஸ்தான் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அந்நாடு பலூசிஸ்தான், கைபர் பதுன்க்வா மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளை சட்ட விரோதமாக ஆக்ரமித்து அங்கு மனித உரிமை மீறல்களைச் செய்து வருகிறது. அந்நாட்டு மதச்சிறுபான்மையினர்களை அடக்கி ஒடுக்குகிறது.
அல்குவைதா பயங்கரவாதிகளை நாட்டிலிருந்து முழுமையாக வெளியேற்றி விட்டதாகக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், பின்லேடனை தியாகி என்று நாடாளுமன்றத்திலேயே வர்ணிக்கிறார்.
தங்கள் நாட்டில் 40000 பயங்கரவாதிகள் இருப்பதையும் அவர்கள் அண்டை நாட்டை தாக்கியதையும் அவரே ஒப்புக் கொள்கிறார். ஜெய்ஷ்-எ-முகமது, லஷ்கர் அமைப்புகளைச் சேர்ந்த 6500 பயங்கரவாதிகள் ஆப்கானில் செயல்படுகின்றனர் என ஐநா பாதுகாப்புக் குழுவே தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையமாக, புகலிடமாகத் திகழ்வது பலராலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT