Published : 09 Jul 2020 06:49 AM
Last Updated : 09 Jul 2020 06:49 AM
கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா - சீனா இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. அப்போது லடாக் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சீன ராணுவம் அத்துமீறியது.
இந்த போருக்குப் பிறகு கடந்த 1965-ம் ஆண் டில் இந்திய வீரர்கள் மீது சீன அரசு அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்தது. அதாவது, சிக்கிம் எல்லையில் முகாமிட்டிருந்த இந்திய வீரர்கள், திபெத்துக்குள் புகுந்து 800 செம்மறி ஆடுகளையும் 59 காட்டெருமைகளை யும் பிடித்துச் சென்றுவிட்டதாக சீனா குற்றம் சாட்டியது. அந்த கால்நடை களை திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையெனில் கடும் பின்விளைவு களை சந்திக்க நேரிடும் என்று கடிதமும் அனுப்பியது சீனா.
அப்போது ஜன சங்கத்தின் எம்.பி. வாஜ்பாய், டெல்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு 801 செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று நூதன போராட்டத்தை நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழில் அப்போது வெளியான செய்தியின் சுருக்கம் வருமாறு:
சில அரசியல் கட்சிகள், சமூக தொண்டு நிறு வனங்கள் சார்பில் சீனாவை கண்டித்து தலைநகர் டெல்லியில் பேரணி நடைபெற்றது. சுமார் 3 மைல் தொலைவுக்கு பேரணி நீண்டிருந்தது. இதில் 801 செம்மறி ஆடுகள் சீன தூதரகத்தை நோக்கி ஓட்டிச் செல்லப்பட்டன.
ஒவ்வொரு செம்மறி ஆட்டின் கழுத்திலும் கருப்பு கயிறு கட்டப்பட்டிருந்தது. அவற்றின் கழுத்தில், ‘‘எங்களை சாப்பிடுங்கள். ஆனால், உலகத்தைக் காப்பாற்றுங்கள்’’ என்ற வாசகம் எழுதிய அட்டைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. சீன விலங்கான டிராகனின் பசியை போக்குவதைக் குறிக்கும் வகையில், அந்த 801 செம்மறி ஆடுகளும் தூதரகம் நோக்கி ஓட்டிச் செல்லப்பட்டன.
தூதரகத்தின் நுழைவு வாயில் அருகே சில நூறு அடி தொலைவில் 801 செம்மறி ஆடுகளும் ஓரம் கட்டப்பட்டன. அந்த செம்மறி ஆடுகளை ஏற்றுக் கொள்ளும்படி சீன தூதரகத்திடம் முறைப்படி மனு அளிக்கப்பட்டது. அப்போதைய சீன தூதரக அதிகாரிகள் செம்மறி ஆடுகளை ஏற்க மறுத்து அடம் பிடித்தனர். பேரணியை நடத்திய மூத்த தலைவர்கள், தூதரகத்தின் கதவில் தங்கள் கோரிக்கை மனுவை பசை போட்டு ஒட்டினர்.
அதில், ‘‘சில காட்டெருமை களையும் செம்மறி ஆடுகளையும் இந்தியா எடுத்துச் சென்றுவிட்டதாக அபாண்ட பழி சுமத்தப்பட்டிருக்கிறது. இதற்கு கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சீனா மிரட்டி உள்ளது. அமைதியை விரும்பும் அண்டை நாட்டுக்கு எதிராக சீனா படைகளை குவிக்கிறது’’ என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நூதன போராட்டம் நடைபெற்ற சில நாட் களுக்குப் பிறகு சீன அரசு தரப்பில் மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ‘‘இந்திய அரசின் ஆதரவுடன் செம்மறியாடு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவ, நவீன புரட்சி காரர்களை திருப்திபடுத்தவே இந்த போராட்ட நாட கம் அரங்கேறியுள்ளது’’ என்று புகார் கூறப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவையும் ரஷ்யாவையும் சீனா மறைமுகமாக குற்றம் சாட்டியது.
உதவி: ஏ. சங்கரன், விபா சுதர்சன், தி இந்து ஆவணக் காப்பகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT