Last Updated : 08 Jul, 2020 08:37 AM

 

Published : 08 Jul 2020 08:37 AM
Last Updated : 08 Jul 2020 08:37 AM

விகாஸுக்கு மறைமுகமாக உதவும் போலீஸார்: உயரதிகாரிக்கு டிஎஸ்பி எழுதிய கடிதம் வலைதளங்களில் வைரல்

புதுடெல்லி

உ.பி.யில் விகாஸ் துபே என்றரவுடியால் 8 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில், விகாஸ் துபேவுக்கு போலீஸார் சிலர் மறைமுகமாக உதவுவதாக உயரதிகாரிகளுக்கு கொல்லப்பட்ட டிஎஸ்பிஎழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

கான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றபோது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னணியில் கான்பூரின் சவுபேபூர் காவல் நிலைய போலீஸார் சிலர், முன்கூட்டியே தகவல்அளித்து விகாஸுக்கு உதவியது தெரியவந்தது. இது தொடர்பாக அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் வினய் திவாரி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, சவுபேபூர் காவல் நிலையத்தில் விகாஸ் துபே மீது அளிக்கப்பட்ட புகார் ஒன்றில் உடனே கைதுசெய்ய வேண்டிய ஆட்கடத்தல் பிரிவு (ஐபிசி 386) நீக்கப்பட்டிருந்தது. இதை குறிப்பிட்டு, கொல்லப்பட்ட டிஎஸ்பி தேவேந்திர குமார் மிஸ்ரா அப்போதைய கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஐ.ஜி.க்கு மார்ச் 14-ல் புகார் கடிதம் எழுதி எச்சரித்துள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் நேற்று முதல் வைரலாகி வருகிறது. இக்கடிதம் மீது அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் 8 போலீஸார் இறந்திருக்க வாய்ப்பில்லை என உ.பி. அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிப்பதற்காக கான்பூருக்கு ஐஜி லஷ்மி சிங் வந்துள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழரான கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தினேஷ்குமார் கூறும்போது, “ஜூன் மாதம் நான் பதவியேற்றபோது அக்கடிதம் எனது கவனத்துக்கு வரவில்லை. மேலும் கோப்புகளிலும் இல்லை. பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நால்வரில் துணை ஆய்வாளரான கே.கே.சர்மா சம்பவ நாளில் ரவுடியை பிடிக்கச் செல்லவில்லை. மற்ற மூவர் அங்குசென்றாலும் துப்பாக்கி குண்டு காயம் ஏற்படாமல் தப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்கப்படுகிறது. துபேயின் 2 பணியாளர்களும் ஒரு நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இதனிடையே தலைமறைவாக உள்ள விகாஸ் துபே, நொய்டா வழியாக டெல்லி நீதிமன்றம்ஒன்றில் சரணடையத் திட்டமிடுவதாகத் தெரியவந்துள்ளது. கான்பூர் போலீஸாரிடம் சிக்கினால் அவர்கள் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்கள் என துபே அஞ்சுவதே இதற்கு காரணமாக கூறப்படுறது. துபே, டெல்லியில் சரண் அடைந்தால் திகார் சிறையில் அடைக்கப்படும் அவரை ‘ட்ரான்சிட் ரிமாண்ட்’ மூலம் உ.பி. போலீஸார் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x