Published : 07 Jul 2020 05:23 PM
Last Updated : 07 Jul 2020 05:23 PM
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகளைத் தொடங்குவது குறித்து விரைவில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் சில ஊக்க அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிடும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி, 25-ம் தேதி முதல் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. அப்போதிலிருந்து எந்த மாநிலத்திலும் திரைப்படப் படப்பிடிப்புகள் ஏதும் நடக்கவில்லை.
ஏறக்குறைய 100 நாட்களுக்கும் அதிகமாக எந்தவிதமான சினிமா படப்பிடிபுகளும் நடக்காமல் அந்தத் துறை முடங்கி இருக்கிறது. அந்தத் துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தீவிரமான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து வருகின்றன.
இந்நிலையில் எப்ஐசிசிஐ ஃப்ரேம்ஸ் 2020 பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சியின் தொடக்க விழா புதுடெல்லியில் இன்று நடந்தது. இதில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்தியா ஊடகத்துறையிலும், திரைத்துறையிலும் சூப்பர் பவராக வருவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்த உழைப்பையும், ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எவ்வாறு தொடங்க வேண்டும் என்பது குறித்து விரைவில் நிலையான வழிகாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிடும்.
திரைத்துறையை ஊக்கப்படுத்தும் வகையில், படப்பிடிப்புகளைத் தொடங்குவது, தொலைக்காட்சித் தொடர்கள் படப்பிடிப்பு, இணை தயாரிப்பு, அனிமேஷன், வீடியோ கேம் ஆகியவற்றுக்கான ஊக்க அறிவிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.
வெளிநாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள் இந்தியாவில் அலுவலகம் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஒரே இடத்திலேயே அனைத்து அனுமதியும் கிடைக்கும் வகையில் வசதிகளையும், ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்'' என்று ஜவடேகர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT