Published : 07 Jul 2020 03:28 PM
Last Updated : 07 Jul 2020 03:28 PM
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டதை சீனா நியாயயப்படுத்த ஏன் அனுமதித்தீர்கள்?, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு எனும் வார்த்தை ஏன் இடம் பெறவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வந்ததால் பதற்றமான சூழல் நீடித்து வந்தது.
இந்தப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் அளவில் 3 கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஏற்கெனவே இருக்கும் நிலையை அப்படியே வைத்திருப்பது, எல்லையில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சீனா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வீ, இந்தியா தரப்பில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டுப் படைகளும் எல்லையிலிருந்து விலகுவது என்பது முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று எல்லையிலிருந்து சீனப் படைகள் கூடாரங்களைப் பிரித்துக்கொண்டு சென்றன.
இது தொடர்பாக சீனா வெளியிட்ட அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கு எனும் வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கல்வான் பள்ளதாக்கு எனும் வார்த்தை குறிப்பிடவில்லை.
இரு நாட்டு அரசுகள் வெளியிட்ட அறிக்கையையும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், “நாட்டின் நலனே மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமானது. இந்திய அரசின் கடமை அந்த நலனைப் பாதுகாப்பதாகும். அப்படியென்றால், ஏன் எற்கெனவே இருந்த நிலை தொடரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை?, நமது எல்லையில் நிராயுதபாணியாகச் சென்ற 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா நியாயப்படுத்த ஏன் அனுமதித்தீர்கள்? மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு எனும் வார்த்தை ஏன் குறிப்பிடவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியா-சீனாவின் மேற்கு எல்லைப்பகுதியான கல்வான்பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்தவையில் சரியானதும், தவறானதும் தெளிவாக இருக்கிறது.
சீனா தன்னுடைய எல்லைப்பகுதியில் ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து பாதுகாக்கும். அங்கு அமைதியும் நிலைத்தன்மையும் நிலவ சீனா தொடர்ந்து முயற்சிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மத்திய வெளியுறவத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு குறித்த எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT