Last Updated : 07 Jul, 2020 02:20 PM

 

Published : 07 Jul 2020 02:20 PM
Last Updated : 07 Jul 2020 02:20 PM

30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்; பினராயி விஜயனுக்கு சிக்கல்; சிபிஐ விசாரணை கோரும் காங்கிரஸ் 

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

வெளிநாட்டுத் தூதரகத்தைப் பயன்படுத்தி, 30 கிலோ தங்கத்தைக் கடத்திய பெண் ஊழியருடன் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் அவர் அந்தப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், ஏற்கெனவே வகித்து வந்த தகவல் தொழில்நுட்பச் செயலாளர் பதவியில் மட்டும் தொடர்ந்து நீடிக்கிறார். தற்போது கேரள முதல்வரின் தனிச்செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மிர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார் என்று அம்மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்தது.

தங்கம் கடத்தலில் தேடப்பட்டுவரும் ஸ்வப்னா : படம் உதவி | ட்விட்டர்

இந்தத் தகவலை அறிந்த சுங்கத்துறையினர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்தில் சோதனையிட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பார்சல்களை ஆய்வு செய்தபோது ஒரு பார்சலில் 30 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பார்சலில் இருந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பார்சலை வாங்குவதற்காக சஜித் என்பவர் நேற்று அங்கு வந்தார். அவரைச் சுற்றி வளைத்த சுங்கத்துறையினர் மற்றும் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்கள் தொடர்புப் பிரிவில் ஏற்கெனவே சஜித் பணியாற்றியவர் என்றும், பல்வேறு முறைகேடுகள் செய்ததால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார் என்பதும் தெரியவந்தது.

வேலையிலிருந்து நீக்கப்பட்ட பின்பும், தூதரகத்தில் சிலருடன் தொடர்பு வைத்துக்கொண்டு பல்வேறு கடத்தல்களில் சஜித் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில் முக்கியமாக அந்தத் தூதரகத்தில் நிர்வாகச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் பணியாற்றியுள்ளார். அவருடன் சஜித்துக்கு கடத்தலில் தொடர்பு ஏற்பட்டுள்ளது, அவரும் கடத்தலில் சஜித்துக்கு உதவியுள்ளார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

நிர்வாகச் செயலாளராக இருந்த ஸ்வப்னா கடந்த 6 மாதங்களுக்கு முன் தனது பணியை ராஜினாமாசெய்தார். தற்போது கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் செயலாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.

ஐ.டி.பிரிவின் நிர்வாகச் செயலாளராக இருந்துவரும் ஸ்வப்னா சுரேஷ், அந்தத் துறையின் செயலாளர் சிவசங்கரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலையடுத்து, ஸ்வப்னாவை போலீஸார் கைது செய்யத் தேடி வருகின்றனர், ஆனால், இதுவரை ஸ்வப்னா இருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பாகத்தான், ஸ்வப்னா சுரேஷ் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் தனிப்பிரிவு செயலராக இருந்த சிவசங்கரன்.

தகவல் தொழில்நுட்பச் செயலாளராக இருக்கும் சிவசங்கரன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலாளராகவும் கூடுதலாகப் பதவி வகித்து வந்தார். இந்தத் தங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சிவசங்கரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக மட்டும் நீடிக்கிறார்.

இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கும், தங்கம் கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா, ''இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடத்த வேண்டும்'' என்று கடிதம் எழுதியுள்ளார்.

''முதல்வர் பினராயி விஜயனுக்குத் தெரியாமல் இந்த விவகாரம் நடந்திருக்காது. இந்தக் கடத்தலுக்கு முதல்வர் அலுவலகம் உதவியுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் பெரிய கிரிமினல் கூட்டம் செயல்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயனும் தன்னுடைய அலுவலகத்தில் எவ்வாறு இதுபோன்ற நபர்கள் பணிக்குச் சேர்க்கப்பட்டார்கள் என்று விளக்க வேண்டும்'' என சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா

பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், “தங்கம் கடத்தலில் தேடப்பட்டு வரும் பெண் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு இருக்கும்போது, எவ்வாறு தகவல் தொழில்நுட்பப் பரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நெருக்கி வருவதால், முதல்வர் பினராயி விஜயனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளிக்கையில். “தகவல் தொழில்நுட்பப் பிரிவில் கடத்தலில் தேடப்பட்டுவரும் பெண் எவ்வாறு பணி அமர்த்தப்பட்டார் என எனக்குத் தெரியாது. விசாரணை நடந்து வருகிறது. அதில் உண்மைகள் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x