Published : 07 Jul 2020 08:03 AM
Last Updated : 07 Jul 2020 08:03 AM

கரோனாவில் இருந்து மீண்ட இளம் பெண்ணை சொந்த ஊரில் விடுவதற்காக ஆட்டோவில் 140 கி.மீ. தொலைவுக்கு 8 மணி நேரம் சவாரி: பெண் ஓட்டுநருக்கு ரூ.1.1 லட்சம் வழங்கி கவுரவித்த மணிப்பூர் முதல்வர்

மணிப்பூர் மாநிலம் இம்பால் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்ணை சொந்த ஊரில் விடுவதற்காக ஆட்டோவில் சென்ற பெண்.

இம்பால்

மணிப்பூரில் கரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்ட இளம் பெண்ணை 140 கி.மீ. தூரத்தில் உள்ள அவரது தொலைதூர கிராமத்துக்கு ஆட்டோவில் 8 மணி நேர சவாலான பயணத்தில் அழைத்துச் சென்ற பெண் டிரைவருக்கு முதல்வர் பிரேன் சிங் பரிசு வழங்கி கவுரவித்தார்.

மணிப்பூரை சேர்ந்த சோமிசான் சித்துங் (22) என்ற இளம் பெண் கொல்கத்தாவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் வந்த அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 14 நாள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த சித்துங், கடந்த மே 31-ம்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.எனினும் சொந்த ஊர் செல்ல அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி அளிக்கப்படவில்லை.

இதனால் சொந்த ஊர் செல்ல வழியின்றி, இம்பாலில் உள்ள ஒரு சந்தையில் அன்று பிற்பகல் தனது தந்தை மற்றும் மாமாவுடன் சித்துங் தவித்துக் கொண்டிருந்தார். கரோனா வைரஸால் சித்துங் பாதிக்கப்பட்டவர் என்பதாலும் அவரது கிராமம் தொலைதூரத்தில் இருப்பதாலும் கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் எவரும் சவாரிக்கு வரவில்லை.

இந்நிலையில் அங்கு பகுதிநேர வேலையாக கருவாடு விற்றுக் கொண்டிருந்த பெண் ஆட்டோ டிரைவர் லைபி ஓனம் (52) இதைகவனித்து அப்பெண்ணை அணுகினார். பிறகு தனது கணவர் உதவியுடன் ஆட்டோவில் பனிமூட்டம் கொண்ட கரடுமுரடான சாலையில் 140 கி.மீ. தொலைவுக்கு 8 மணிநேரம் பயணம் செய்து அப்பெண்ணை அவரது வீட்டில் கொண்டுபோய் சேர்த்தார்.

இதுபற்றி அறிந்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், அண்மையில் லைபியை கவுரவித்தார். அப்போதுபரிசுத் தொகையாக ரூ.1,10,000-க்கான காசோலையை வழங்கினார்.

இது தொடர்பாக லைபி கூறும்போது “இது முதல்வரின் கவனத்துக்கு சென்றிருக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்ல. ஆட்டோ டிரைவராக நான் எனது கடமையைதான் செய்தேன். அந்த பெண் இடத்தில் என்னை வைத்து நான் கற்பனை செய்து பார்த்தேன். யாரும் அவரை அழைத்துச் செல்லாவிடில் அப்பெண் எப்படி சொந்த ஊருக்கு செல்வாள் என்ற கவலையால் நானே செல்ல முடிவு செய்தேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x