Published : 07 Jul 2020 08:01 AM
Last Updated : 07 Jul 2020 08:01 AM
வட மாநிலங்களில் காவடி யாத்திரை புனிதமாகக் கருதப்படுகிறது. மகாசிவராத்திரி மற்றும்ஸ்ரவண மாதம் என வருடத்தில்இரண்டு முறை இந்த யாத்திரைநடத்தப்படும்.
காவடி யாத்திரையின்போது உத்தரபிரதேசம் - உத்தராகண்ட் மாநில எல்லையில் உள்ள ஹரித்துவார் அல்லது அருகிலுள்ள குறிப்பிட்ட இடங்களில் புனித கங்கையின் நீரை குவளைகளில் எடுப்பார்கள். ஒவ்வொருவரும் காவடி ஏந்தியபடி, இதற்காக குறைந்தபட்சம் பல நூறு கிலோ மீட்டர் தொலைவிற்கு காலில் செருப்புகள் இன்றி நடந்தே செல்வதுண்டு. இந்த புனித நீரை கொண்டு சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்வார்கள்.
இந்த வருடம் கரோனா வைரஸ்பரவல் ஆபத்து நிலவுவதால் நேற்று தொடங்கிய ஸ்ரவண மாதத்தின் காவடி யாத்திரைக்கு பாஜக ஆளும்உத்தரபிரதேசம், உத்தராகண்ட், ஹரியாணா ஆகிய 3 மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துறவியான யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உபியிலும் விதிக்கப்பட்ட தடை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதை பொதுமக்கள் மீறாமல் இருக்க மூன்று மாநிலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சமயங்களில் பல ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் காவடி ஏந்தி கூட்டம், கூட்டமாக சாலைகளில் நடப்பது உண்டு. இவர்களால் போக்குவரத்து நெரிசல்ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்களின் வாகனங்களுக்கு தடைவிதிப்பது அல்லது மாற்று வழிகளில் அனுப்புவதும் உண்டு.
பக்தர்கள் இளைப்பாறவும், உணவருந்தவும் வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொதுமக்கள் பந்தல் அமைத்து உதவுவதும் வழக்கம். சுமார் ஒரு மாதம் தொடரும் இந்த யாத்திரைக்கு கடந்த வருடம் பாஜ அரசுகளால் இந்த மாநிலங்களின் சாலைகளில் நடந்து சென்ற பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஹரித்துவார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தமிழருமான எஸ்.செந்தில் ஆவுடை கிருஷ்ணராஜ் கூறும்போது, ‘கடந்த வருடம் 3 கோடி காவடிகள் கொண்டுவரப்பட்டன. இம்முறை காவடி எடுத்து வருபவர்கள் ஹரித்துவாரில் நுழையாதபடி இருக்க எல்லைகள் சீல் வைக்கப்பட்டு மாநில சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீறி வருபவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, மத்தியப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலஅரசுகள் விரும்பினால் அவர்களுக்கு கங்கை நீரை டேங்கர்களில் அனுப்பி வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT