Published : 07 Jul 2020 07:59 AM
Last Updated : 07 Jul 2020 07:59 AM

தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணத்தை குறைக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி

தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை கட்டண உச்சவரம்பை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான கட்டண உச்சவரம்பு ரூ.4,500 என மத்திய அரசு நிர்ணயம் செய்தது.

எனினும், கடந்த மே மாதம் இந்த உச்சவரம்பை நீக்கிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), தனியார்ஆய்வகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை நிர்ணயிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், பரிசோதனை கருவிகள் உள்நாட்டிலேயே கிடைப்பதால் தனியார் ஆய்வகங்கள் கட்டணத்தை மேலும்குறைக்க வேண்டும் என கடந்தமாதம் ஐசிஎம்ஆர் கேட்டுக்கொண்டது. இப்போது, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநில அரசுகள் பரிசோதனை கட்டண உச்சவரம்பை ரூ.2,200 ஆக நிர்ணயித்துள்ளன.

இந்நிலையில், ஏழை, நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் கரோனா பரிசோதனைக்கான கட்டண உச்சவரம்பை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதன்படி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x