Published : 06 Jul 2020 07:54 PM
Last Updated : 06 Jul 2020 07:54 PM

நாடுமுழுவதும் கரோனா பரிசோதனை: 1 கோடியை தாண்டியது

புதுடெல்லி

கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க சாதனையாக 1 கோடி என்னும் மைல்கல்லைத் தாண்டியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

விரிவான பரிசோதனை மற்றும் சோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல் என்னும் உத்தியில் கவனம் செலுத்தியதாலும் மத்திய அரசு மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளாலும் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 3,46,459 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை தற்போது, 1,01,35,525 ஆக உயர்ந்துள்ளது.

நாடுமுழுவதும் சோதனைக்கூடங்களின் கட்டமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால், இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. இன்று வரை, 1105க்கும் அதிகமான சோதனைக்கூடங்கள், மக்கள் கோவிட் சோதனை செய்து கொள்வதற்காக இயங்கி வருகின்றன. அரசுத் துறையில் 788 ஆய்வுக்கூடங்களும், தனியார் பிரிவில் 317 சோதனைக்கூடங்களும் இயங்குகின்றன. பல்வேறு வகையான சோதனைகள் மூலம் பரிசோதனைக் கூடங்கள் வருமாறு;

ரியல் டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள் ; 592 ( அரசு -368 + தனியார்- 224)

ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்; 421( அரசு- 387+ தனியார் 34)

சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்; 92 ( அரசு-33+ தனியார்-59)

மத்திய அரசு, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் கோவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை முயற்சிகளில் உறுதியான கவனம் செலுத்தி வருவதால், கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை இன்று 4,24,432 ஆக

உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 15,350 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயாளிகளை விட 1,71,145 பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர். இது தேசிய குணமடைந்தோர் விகிதத்தை 60.86 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

2,53,287 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x