Published : 06 Jul 2020 08:46 AM
Last Updated : 06 Jul 2020 08:46 AM
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லி லட்யன்ஸ் பகுதியில் தங்கியிருக்கும் அரசு குடியிருப்பு, ஆகஸ்ட் மாதத்திலிருந்து பாஜக தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை கடந்த 1-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், “ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள தனது அரசுக் குடியிருப்பைக் காலி செய்யவேண்டும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.
எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.
ஆதலால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்துவிடுவார் என்று நம்பப்படுவதால், அந்த வீட்டை அவருக்கு அடுத்ததாக பாஜக தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதுகுறித்து மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ டெல்லியில் லோதி எஸ்டேட் 35 பிரிவில் இருக்கும் அரசு இல்லத்தை பிரியங்கா காந்தி காலை செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்துவிடுவார்.
அவருக்கு அடுத்தார்போல் அந்த வீடு, பாஜக தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பியுமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது உடல்நிலை காரணமாக வீட்டை மாற்ற வேண்டும் என்று அனில் பலூனி மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதால், அந்த வீடு அவருக்கு ஒதுக்கப்படுகிறது.
அனில் பலூனி ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். அவர் பல்வேறு முன்னெச்சரிக்கையுடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது அவர் தங்கியிருக்கும் வீடு அவருக்கு பொருத்தமாக இல்லை என்பதால் வீடு மாற்றக் கோரினார். அந்த கோரிக்கையின் அடிப்படையில் அவருக்கு பிரியங்கா காந்தியின் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT