Last Updated : 05 Jul, 2020 03:29 PM

2  

Published : 05 Jul 2020 03:29 PM
Last Updated : 05 Jul 2020 03:29 PM

பெரிய மாநிலத்தின் கோரமுகம்: நாடு முழுவதிலும் பறிமுதலானத் துப்பாக்கிகளில் பாதி உ.பி.யை சார்ந்தது

புதுடெல்லி

கான்பூரில் 8 போலீஸார் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தின் கோரமுகம் வெளியாகி உள்ளது. இங்கு இந்திய ஆயுதங்கள் சட்டப்படி பறிமுதலானப் பல்வேறு வகை துப்பாக்கிகளின் எண்ணிக்கை நாடு முழுவதிலுமான எண்ணிக்கையில் பாதி ஆகும்.

கடந்த வியாழக்கிழமை கான்பூரின் கிரிமினல் விகாஸ் துபேவை பிடிக்கச் சென்ற 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒரு டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் அடக்கம்.

இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு அங்குள்ள ரவுடிகளிடம் சட்டவிரோதமாக பல நவீன துப்பாக்கிகள் சாதாரணமாக இருப்பது காரணம். பல வருடங்களுக்கு பின் உபியில் பறிமுதலான துப்பாக்கிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்துள்ளது.

இதன்மூலம், உபியில் உள்ள கிரிமினல்களின் கோரமுகம் வெளியாகி உள்ளது. இதில், நாடு முழுவதிலும் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதமானத் துப்பாக்கிகளில் பாதி எண்ணிக்கை உ.பி.யை சேர்ந்தது என்பதும் தெரிந்துள்ளது.

இந்த அதிர்ச்சிகரமானத் தகவல் கடைசியாக வெளியான தேசிய குற்றப்பதிவின் ஆவணத்தில் 2018 ஆம் ஆண்டில் பதிவாகி உள்ளது. இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களின் கிரிமினல்கள் மற்றும் இதரவகையினரிடம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கை 72,805.

இவற்றில் உபியில் மட்டும் பறிமுதலானவற்றின் எண்ணிக்கை 34,105. உரிமங்கள் பெற்றதும், பெறாததும் மற்றும் கள்ளத்துப்பாக்கிகளும் இதில் அடங்கி உள்ளன.

இதன் அடுத்த எண்ணிக்கையில் மத்தியப்பிரதேசத்தில் 14,227 எனவும், மூன்றாவதாக ராஜஸ்தானில் 7,334 எனவும் உள்ளன.

நான்காவதாகப் பிஹாரில் 4,160 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் தலைநகரான டெல்லியை ஒட்டி அமைந்துள்ள உபியில் நடைபெறும் கொலைகளில் 90 சதவிகிதம் துப்பாக்கிகளால் நடைபெறுகின்றன. இதன் பின்னணியில் அம்மாநிலத்தில் உரிமம் பெறாத மற்றும் கள்ளத்துப்பாக்கிகள் எளிதாகக் கிடைத்து விடுவது காரணமாக உள்ளது.

டெல்லியின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள உபியின் மேற்குப்பகுதி மாவட்டங்களில் கள்ளத்துப்பாக்கிகள் அதிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அப்பகுதியின் அலிகர், மீரட் மற்றும் முசாபர்நகரில் கள்ளத்துப்பாக்கிகளின் தொழிற்சாலைகளும் அவ்வப்போது சிக்குவது உண்டு.

இம்மாநிலத்தில் அரசு உரிமப் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இம்மாநிலத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கானத் தகுதியாகத் துப்பாக்கி ஏந்தியத் தனிப்பட்டக் காவலர்கள் கொண்டவர்களே கருதப்படுகின்றனர்.

உபியில் நடைபெறும் விழாக்களுக்கு வந்த விருந்தினர்கள் எண்ணிக்கை முக்கியம் அல்ல. அதற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் வந்த முக்கியப் பிரமுகர்களை பொறுத்தே அவ்விழாவின் முக்கியத்துவம் கணக்கில் கொள்ளப்படுகிறது.

இப்பிரச்சனையால் பலசமயம், உபியின் வாட்டசாட்டமான இளைஞர்களுக்கு தனிப்பட்டக் காவலர்கள் பணி எளிதாகக் கிடைத்து விடுகிறது. இதில், வேலை கேட்டு வருபவர்கள் கைகளில் ஒரு உரிமம் பெற்ற துப்பாக்கியை கொடுத்து தனதருகில் முக்கியப் பிரமுகர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்.

இதனால், உபியின் 23 கோடி மக்கள் தொகையில் 11 லட்சம் பேரிடம் அரசு உரிமம் பெற்றத் துப்பாக்கிகள் உள்ளன. உபி மாநிலக் காவல்துறையின் சுமார் 3 லட்சம் போலீஸாரிடம் துப்பாக்கிகள் உள்ளன.

எனினும், அரசு உரிமம் பெறாத துப்பாக்கிகள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. உபியில் பாஜகவின் முதல்வராக யோகி ஆதித்யநாத் அமர்ந்தது முதல் கிரிமினல்களின் மீதான நடவடிக்கை அதிகமாகி உள்ளது.

இவற்றுக்கு முடிவுகட்ட வேண்டி முதல்வர் யோகி ஆட்சியில் நடைபெற்ற, 6143 என்கவுண்டர்களில் 113 கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல் குற்றங்கள் புரிந்த 17,717 கிரிமினல்களின் பெயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x