Published : 05 Jul 2020 08:33 AM
Last Updated : 05 Jul 2020 08:33 AM

திருப்பதி தேவஸ்தானத்தில் 17 பேருக்கு கரோனா: அறங்காவலர் சுப்பா ரெட்டி தகவல்

திருப்பதி

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் அர்ச்சகர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், தடுப்புநடவடிக்கைகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கரோனா வைரஸ் தொற்று பரவலைதடுக்க மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி தேவஸ்தானத்தில் அர்ச்சகர்கள் உட்பட 17 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இனிமேல் ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு ஷிப்ட் என்ற அடிப்படையில் பணிபுரிய உள்ளனர்.

அதேநேரம் இன்று வரை பக்தர்கள் ஒருவருக்கு கூட கரோனா தொற்று வரவில்லை. எனினும், தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்து உள்ளது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அந்தந்த மாநில எல்லைகளில் ஏற்படும் பிரச்சினைகளை தாங்களே எதிர்கொள்ள வேண்டும். தயவு செய்து சிவப்பு மண்டலம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வரவேண்டாம். சுவாமிக்கு தினமும்நடத்தப்படும் கல்யாண உற்சவம்ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருமலையில் 7.5 ஏக்கர் நிலத்தில் ரூ.200 கோடி செலவில் கர்நாடக மாநில பக்தர்களுக்காக தங்கும் அறைகள் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கர்நாடகா மற்றும் ஆந்திர முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x