Last Updated : 04 Jul, 2020 05:00 PM

4  

Published : 04 Jul 2020 05:00 PM
Last Updated : 04 Jul 2020 05:00 PM

‘அரச தர்மத்தை கடைபிடியுங்கள்’- சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கபில் சிபலின் சரமாரிக் கேள்விகள் 

லடாக்கிற்கு திடீர் வருகை தந்து ஜவான்களிடம் பிரதமர் மோடி பேசிய பிறகு ‘சீனா ஊடுருவல்கள் பற்றிய உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெரிவித்து அரச தர்மத்தைக் கடைபிடியுங்கள்’ என்று காங்கிரஸ் பிரதமர் மோடியைக் கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக காணொலி செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் சிபல் , லடாக்கின் பாங்காங் ட்சோ பகுதியில் சீன கட்டமைப்புகள் இருப்பதான மே மற்றும் ஜூன் மாத செயற்கைக் கோள் படங்களைக் காட்டினார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு உண்மையப் பேசுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் மோடி, ‘மாயத் தோற்றம் மற்றும் பிரமையை உருவாக்கும்’அரசியலை நிறுத்த வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார். சீனாவுக்கு ‘சிகப்புக் கண்களை” காட்டி இந்தியப் பகுதியை மோடி பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

“சீனாவை கண்ணுக்குக் கண் சந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தியப் பகுதியில் அவர்களது சட்ட விரோத ஆக்ரமிப்பிலிருந்து வெளியேறச் சொல்ல வேண்டிய நேரமிது. இதுதான் பிரதமர் ஆன நீங்கள் பின்பற்ற வேண்டிய அரச தர்மம் ஆகும்” என்றார்.

மேலும் பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை கபில் சிபல் முன் வைத்தார்:

“படங்கள் பொய் சொல்லாது என்று கூறுவார்கள், இந்த இந்தியப் பகுதியில்தான் ராடார்கள், ஹெலிபேடு மற்றும் பிற கட்டட அமைப்புகளை சீனா அத்துமீறிக் கட்டியுள்ளதா? பிரதமர் பதில் கூறுவாரா?

20 இந்திய ஜவான்கள் வீர மரணம் எய்திய ரோந்துப் புள்ளி 14 என்ற இடம் உட்பட கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ஆக்ரமிப்பு செய்துள்ளதா? ஹாட் ஸ்பிரிங்ஸிலும் சீனா ஆக்ரமிப்பு செய்துள்ளதா இல்லையா?

கட்டுப்பாட்டு எல்லையில் 18 கிமீ உள்ளே, தேப்சாங் சமவெளியில் ஒய்-சந்திப்பு பகுதி வரை சீனா ஆக்ரமித்துள்ளதா இல்லையா?இந்தியாவின் சியாச்சென் மற்றும் காரகோரம் பகுதியில் ராணுவ சப்ளையின் ஆயுள் ரேகையாகத் திகழும் இந்தியாவின் பாதுகாப்புப் பகுதியான டிபிஓ ஏர்ஸ்ட்ரிப் பகுதியை சீனா அச்சுறுத்துகிறதா இல்லையா?” என்று கேள்விகளை எழுப்பினார்.

இது 1962-ம் கால இந்தியா அல்ல எல்லை விரிவுபடுத்துவதற்கான காலக்கட்டம் ஓய்ந்து போய் விட்டது என்று பிரதமர் மோடி கூறியது குறித்து கபில் சிபல் கூறும்போது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சீனாவிடம் நேரடியாகத் தெரிவித்தார், இந்தியா சீனாவின் நிலப்பகுதி கோரல்களை ஏற்காது என்றார்.

சீனாவுக்கு கடிதம் எழுதிய நேரு, சீனாவின் 1959 வரையறையை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா அடிபணியாது, இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் சரி, அது எவ்வளவு காலம் நீடித்தாலும் சரி, எவ்வளவு கடினமான போராட்டமாக இருந்தாலும் சரி என்று நேரு திட்டவட்டமாக அப்போது எழுதியதாக் கபில் சிபல் தெரிவித்தார்.

1959ம் ஆண்டு சீனாவின் வரையறையின் படி மொத்த கல்வான் பகுதியும் இந்தியாவில் இருப்பதாகக் காட்டப்பட்டது என்று முரண்பட்ட கபில் சிபல், ஜூன் 16, 2020-க்குப் பிறகுதான் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சீனா உரிமை கொண்டாடுகிறது என்றார் சிபல்.

“இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகிய பிரதமர்களும் இது போன்ற நேரங்களில் எல்லைக்குச் சென்று இந்திய ராணுவ வீரர்களை ஊக்குவித்துள்ளனர். நேருவும் 1962ல் ராணுவ வீரர்களை ஊக்குவிக்க எல்லைப் பகுதிக்குச் சென்றார்.

ஆனால் மோடி 230 கிமீ தொலவில் நிமூவிலேயே தங்கி விட்டதாகத் தெரிகிறது

லடாக் உள்ளூர் கவுன்சிலர்கள், அதாவது பாஜக கவுன்சிலர்கள் உட்பட, பிப்ரவரி மாதம் சீனா நம் நிலத்தைக் கைப்பற்றியது என்று அறிக்கை ஒன்றை பிரதமர் மோடியிடம் அளித்தார்களா இல்லையா? பிரதமர் என்ன நடவடிக்கை எடுத்தார். அப்போது அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் நாம் சீனாவின் அத்துமீறல்களை முன் தவிர்த்திருக்க முடிந்திருக்குமே?”

இவ்வாறு கபில் சிபல் கேள்விகளை எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x