Published : 03 Jul 2020 04:54 PM
Last Updated : 03 Jul 2020 04:54 PM
உங்களின் வீரமும், துணிச்சலும் உலகிற்கு இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றியிருக்கிறது. எதிரிகள் உங்களின் கோபத்தையும், வீரத்தையும் பார்த்துவிட்டார்கள் என்று ராணுவ வீரர்களிடத்தில் பிரதமர் மோடி பேசினார்.
கடந்த மாதம் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்பை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. சீன ராணுவமும் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வருகிறது.
இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் அளவில் இதுவரை 3 சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியாக இரு தரப்பு ராணுவ வீரர்களும இருந்தாலும் பதற்றமான சூழல் குறையவில்லை.
இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத், தரைப்படைத் தளபதி எம்எம் நரவானே ஆகியோருடன் இன்று காலை லடாக் சென்றடைந்தார். தரைமட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.
அதுமட்டுமல்லாமல் நிமு பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ-திபெத் படை வீரர்கள் ஆகியோருடன் உரையாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
இந்திய வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''உங்களின் வீரமும், துணிச்சலும் உலகிற்கு இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றியுள்ளது. உங்களின் வீரம் நீங்கள் இப்போது தங்கியிருக்கும் இந்த மலையின் உச்சியைவிட உயர்ந்தது.
இந்தியாவின் எதிரிகள் அனைவரும் உங்களின் வேகத்தையும், சீற்றத்தையும் பார்த்துவிட்டார்கள்.
ஒரு நாடு தனது எல்லையை விரிவுபடுத்தும் காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சி, மேம்பாட்டுக்கான காலம். தனது எல்லையை விரிவாக்கம் செய்ய நினைக்கும் நாடுகள், அவற்றின் படைகள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் அல்லது திரும்பிச் சென்றிருக்கிறார்கள். இதுதான் வரலாறு உணர்த்தும் பாடம்.
உங்களின் தியாகத்தால் இந்தியாவின் தற்சார்புப் பொருளாதாரம் வலிமையடையும். நான் என் முன் அமர்ந்திருக்கும் பெண் ராணுவ வீரர்களைப் பார்க்கிறேன். எல்லையில் போர்க்களத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்கள்.
இந்திய வீரர்களின் வீரம், துணிச்சல் அனைத்து இடங்களிலும் பேசப்படும். தேசத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உங்களின் வீரம், துணிச்சல் போற்றப்படும். யார் பலவீனமாக இருக்கிறார்களோ அவர்கள் அமைதிக்கான தொடக்கத்தைக் கொண்டுவர முடியாது. அமைதியைக் கொண்டுவருவதற்கு துணிச்சல் மிகவும் அவசியமானது.
உலகப் போராகட்டும், அமைதியாகட்டும். எதன் தேவை எழுந்தாலும் இந்த உலகம் நம் துணிச்சலையும் அமைதிக்கான முயற்சியையும்தான் பார்த்திருக்கிறது. மனித சமூகத்தின் நலனுக்காகப் பணியாற்றுவோம்.
இந்தியாவின் 130 கோடி மக்களின் பெருமையின் அடையாளமாக லடாக் இருந்து வருகிறது. இந்த நாட்டுக்காக விருப்பப்பட்டு தனது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு சொந்தமான பூமி லடாக். இந்தப் பகுதியைப் பிரிப்பதற்காக, பிளவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட ஒவ்வொரு முயற்சியையும் லடாக் மக்கள் முறியடித்துள்ளார்கள்.
புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணனை வணங்கும் ஒரே மக்கள் நாம். அதேசமயம், அதே கிருஷ்ணர் கையில் சுதர்சன சக்கரத்தையும் பின்பற்றுகிறோம்.
இந்த நேரத்தில் படை வீரர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மகான் திருவள்ளுவர் ஒரு படை வீரர் எவ்வாறு இருக்க வேண்டும் என படைமாட்சி எனும் அதிகாரத்தில் தெரிவித்துள்ளார்.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு என்று கூறியுள்ளார்.
அதாவது, வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும் என்று மகான் திருவள்ளுவர் கூறியுள்ளார்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT