Published : 03 Jul 2020 02:53 PM
Last Updated : 03 Jul 2020 02:53 PM
கரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பாஜக சார்பில் மக்கள் நலப்பணிகள் என்னென்ன நடந்தன என்பது குறித்து நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் மாநில பாஜக தலைவர்கள் காணொலி வாயிலாக விளக்க வேண்டும் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா வைரஸால் கொண்டு வரப்பட்ட ஊரடங்குக் காலத்தில் மக்களுக்காகச் செய்த பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்து மாநில பாஜக தலைவர்கள் நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன் விளக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஆன்லைன் மூலம், காணொலி வாயிலாகக் கட்சியின் டிஜிட்டல் தளத்தில் நடைபெறும்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக பதவி ஏற்று முதலாம் ஆண்டு விழாவையொட்டி, இதுவரை பாஜக சார்பில் 61 காணொலிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11.49 கோடி மக்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளையும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று விளக்கி வருகிறார்கள். வீட்டுக்கு வீடு பிரச்சாரம் 5.41 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளது
லாக்டவுன் காலத்தில் பாஜக சார்பில் 22 கோடி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 80 லட்சம் சானிடைசர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. 2.50 கோடி முகக்கவசங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அறிமுகம் செய்த ஆரோக்கிய சேது செயலி குறித்த விழிப்புணர்வும் செய்யப்பட்டு, பிஎம். கேர்ஸ்க்கு நிதியுதவி அளிக்க மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது''.
இவ்வாறு அருண் சிங் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் திடீர் லடாக் பயணம் குறித்துக் கேள்வி எழுப்புகையில், ''பிரதமர் மோடி மீது மக்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். எல்லையில் எந்தவிதமான அத்துமீறல் நடந்தாலும் அதற்குத் தகுந்த பதிலடி தரப்பட்டது என்று பிரதமர் ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டார'' என்று பதில் அளித்தார்.
உ.பி.யில் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு, அருண் சிங் பதில் அளிக்கையில், “உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான அரசு குற்றவாளிகளைத் தப்பவிடாது. நிச்சயம் தண்டனை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT