Published : 03 Jul 2020 02:31 PM
Last Updated : 03 Jul 2020 02:31 PM
எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய மின்திட்டங்களுக்குத் தேவையான மின் சாதனங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யமாட்டோம் என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அந்தச் சம்பவத்துக்குப்பின் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை மக்கள் மனதில் எழுந்து வருகிறது. சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற கோஷமும் வலுத்து வருகிறது.
மேலும், மத்திய அமைச்சர்கள் சிலரும் வெளிப்படையாகவே சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கமிட்டுள்ளனர்.
பிஎஸ்என்எல் நிறுவனமும் 4ஜி தொழில்நுட்பத்துக்கு சீனப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரயில்வே அமைச்சகமும் சமீபத்தில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
உள்நாட்டுப் பாதுகாப்பு, மக்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் சீனாவின் 59 செல்போன் செயலிகளையும் இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்கமாட்டோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் டெல்லியில் காணொலி வாயிலாக மாநில அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''எல்லையில் சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் மோதல் வலுத்து வரும் நிலையில் அந்த நாடுகளில் இருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்வதை அனுமதிக்க முடியாது.
சீனாவிலிருந்து மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்ய, மாநில மின்பகிர்மான நிறுவனங்களுக்கு எந்த அனுமதியும் அளிக்க முடியாது. நாம் உள்நாட்டிலேயே அனைத்தையும் உற்பத்தி செய்கிறோம். பின் ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்?
மின்திட்டங்களுக்குத் தேவையான பொருட்களை ரூ.71 ஆயிரம் கோடிக்கு ஆண்டுதோறும் இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு சீனாவிலிருந்து கொள்முதல் செய்கிறோம்.
எல்லையில் நம்நாட்டு வீரர்களுடன் சீனா மோதலில் ஈடுபட்டுள்ளபோது, மிகப்பெரிய அளவில் சீனாவிடமிருந்தும், பாகிஸ்தானிடம் இருந்தும் இறக்குமதி செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
எல்லைகளில் நம்முடன் பிரச்சினை செய்துவரும் நாடுகளில் இருந்து மின்திட்டங்களுக்கான எந்த சாதனங்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதியளிக்காது. அவர்கள் அனுப்பும் ஹார்ட்வேரில் ஏதேனும் வைரஸ் இருந்தால், அது நம்முடைய மின்திட்டத்தைப் பாதிக்கும்.
மின்சாதனக் கோபுரங்கள், கண்டக்டர்கள், டிரான்ஸ்பார்மர்கள், மீட்டர்கள் அனைத்தும் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். மாநில மின்பகிர்மான நிறுவனங்கள் சீனாவிடம் எந்த ஆர்டரும் எடுக்க வேண்டாம். இறக்குமதி செய்யப்பட்டுள்ள அனைத்து மின்சாதனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் மால்வேர் (வைரஸ்கள்) ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும்''.
இவ்வாறு ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT