Last Updated : 03 Jul, 2020 11:39 AM

1  

Published : 03 Jul 2020 11:39 AM
Last Updated : 03 Jul 2020 11:39 AM

இந்தியாவில் கரோனாவுக்கு 2-வது தடுப்பு மருந்து: மற்றொரு உள்நாட்டு மருந்து நிறுவனத்துக்கு மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு அனுமதி

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே முதல் முறையாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், 2-வதாக மற்றொரு நிறுவனத்துக்கும் மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் எனும் நிறுவனம் கரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. இதனை மனிதர்கள் மீது இரு கட்டங்களாகப் பரிசோதனை செய்யலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதியளித்துள்ளது.

கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வல்லுநர்கள் குழுவின் பரிந்துரையின்படி இந்த நிறுவனத்துக்கு கிளினிக்கல் பரிசோதனைக்கு (மனிதர்கள் மீதான பரிசோதனை) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மத்திய மருத்துக் கட்டுப்பாட்டுத்துறை அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் நிறுவனம் தான் கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனை செய்ததற்கான விவரங்களைத் தாக்கல் செய்தது.

எலி, முயல், கினியா பிக், மைஸ் போன்ற விலங்குகளுக்கு மருந்துகளைப் பரிசோதனை செய்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வளர்ந்துள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் அளித்த பரிசோதனை அறிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்ததில் அவை முழு மனநிறைவை அளிக்கின்றன. ஆதலால், ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் நிறுவனம், மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையை இரு கட்டங்களாக நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் சேர்ந்து கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி வரும் 7-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x