Published : 03 Jul 2020 10:32 AM
Last Updated : 03 Jul 2020 10:32 AM
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து வரும் 7-ம் தேதி மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.
இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கோவாக்ஸின் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.
கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின.
இந்த நிலையில் இந்த மருந்து மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் முயற்சி வரும் 7-ம் தேதி இரு கட்டங்களாகத் தொடங்க உள்ளது.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா சமீபத்தில் கடிதம் எழுதி, பரிசோதனை முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிசோதனை வெற்றியடைந்தால், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
''கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பு மருந்து கோவாக்ஸின். இந்த மருந்து தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசின் உயர்மட்டத்தில் உள்ள பல்வேறு துறைகள் இணைந்து கண்காணித்து வருகின்றன.
புனே ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து இந்த மருந்தைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு க்ளினிக்கல் லெவலுக்கு முந்தைய முறைக்கும், அடுத்த கட்டத்துக்கும் வெற்றிகரமாக வந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் திட்டத்தில் 12 நிறுவனங்களை மிக விரைவாகப் பணிகளைச் செய்யக் கோரி ஐசிஎம்ஆர் கேட்டுக்கொண்டது.
மக்களுக்கு அவசரமாக கரோனா தடுப்பு மருந்து தேவைப்படுவதால், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்துக்கு கிளினிக்கல் பரிசோதனை செய்ய விரைவாக அனுமதி வழங்கப்பட்டது.
ஆதலால் எந்தவிதமான தாமதமும் இன்றி, ஜூலை 7-ம் தேதிக்குள் கிளினிக்கல் பரிசோதனையைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
இந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெற்றிகரமாக முடிந்தால், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மருந்தின் முடிவுகளை அறிவித்து 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஐசிஎம்ஆர் திட்டமிட்டுள்ளது''.
இவ்வாறு ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT