Last Updated : 03 Jul, 2020 08:14 AM

2  

Published : 03 Jul 2020 08:14 AM
Last Updated : 03 Jul 2020 08:14 AM

உத்தரப் பிரதேசத்தில் ரவுடிகளுடன் ஏற்பட்ட மோதலில் டிஎஸ்பி, ஆய்வாளர் உள்பட 8 போலீஸார் சுட்டுக்கொலை

துப்பாக்கிச் சூடு நடந்த கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ள காட்சி : படம் | ஏஎன்ஐ

லக்னோ

உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் முக்கிய ரவுடி ஒருவரைக் கைது செய்ய போலீஸார் சென்றபோது நடந்த மோதலில், ரவுடிகள் சுட்டதில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீஸார் கொல்லப்பட்டனர். 4 போலீஸார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கான்பூர் மாவட்டம், சவுபேபூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதி திக்ரு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. இவர் மீது கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் ரவுடி விகாஸ் துபே சமீபத்தில் ஒருவரைக் கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் அவரைக் கைது செய்ய போலீஸார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே கிராமத்தில் தங்கியிருப்பதாக அறிந்த போலீஸார், அவரைக் கைது செய்வதற்காக நேற்று இரவு சென்றனர். டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள், 5 காவலர்கள் எனப் பெரிய குழுவினர் சென்றனர்.

போலீஸார் அந்தக் கிராமத்துக்குள் நுழைய முடியாதவகையில் பல்வேறு தடுப்புகளை வழியெங்கும் ரவுடிகள் செய்திருந்தனர். அதையும் தாண்டி போலீஸார் கிராமத்துக்குள் சென்றபோது, ஒரு வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் பலர் போலீஸார் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

ரவுடிகள் சுடுவதை போலீஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. போலீஸார் பதிலடி கொடுக்க முனைவதற்குள் ரவுடிகள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, ஆய்வாளர் பில்ஹார், இரு துணை ஆய்வாளர்கள் , 4 காவலர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 போலீஸார் காயமடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக பக்கத்து மாவட்டமான கன்னூஜ் மாவட்டத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆம்பலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து ரவுடிகள் அனைவரும் தப்பிவிட்டதால் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து உ.பி. போலீஸ் டிஜிபி ஹெச்.சி.அஸ்வதி நிருபர்களிடம் கூறுகையில், “ரவுடி துபேயைக் கைது செய்யும் நோக்கில்தான் போலீஸார் சென்றனர். ஆனால், ரவுடி துபேயின் ஆட்கள் ஒரு மாடியின் மீது மறைந்திருந்து போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

போலீஸார் இந்தக் கிராமத்துக்குள் நுழைய முடியாத வகையில் வழியெங்கும் தடுப்புகளையும், தடைகளையும் ரவுடிகள் உருவாக்கி இருந்தனர். அதையும் மீறி போலீஸார் சென்றபோது, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ரவுடிகள் கையில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்திருக்கும் என்பதை போலீஸார் கருதவில்லை. ரவுடிகளைப் பிடிக்க சிறப்பு அதிரடிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த திக்ரு கிராமத்துக்கு கான்பூர் கூடுதல் எஸ்.பி., கான்பூர் போலீஸ் ஐஜி, சட்டம் ஒழுங்கு டிஜி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆகியோர் விரைந்துள்ளனர். தடயவியல் துறையினர் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

ரவுடிகள் துப்பாக்கிச் சூட்டில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, காவல் நிலைய அதிகாரி மகேஷ் யாதவ், அனுப் குமார், உதவி ஆய்வாளர்கள் நெபுலால், காவலர்கள் சுல்தான் சிங், ராகுல், ஜிதேந்திரா, பப்லு ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று உ.பி. போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த முதல்வர் ஆதித்யநாத் இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், முழுமையான அறிக்கை அளிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x