Published : 03 Jul 2020 07:55 AM
Last Updated : 03 Jul 2020 07:55 AM

அராஜகத்துக்கு அடிபணிய மாட்டோம்; நிர்பந்தத்தால் ஆயுதம் ஏந்துகிறோம்- பிரதமர் ஜவகர்லால் நேரு அறிவிப்பு

புதுடெல்லி, அக்.18

‘‘இந்தியாவின் மரியாதை, கவுரவம், நிலப் பகுதிகளை பாதுகாப்போம். இதற்காக என்ன விலை கொடுக்க நேரிட்டாலும் பின்வாங்க மாட்டோம். எந்த பின்விளைவுகளுக்கும் அஞ்ச மாட்டோம்’’ என்று பிரதமர் ஜவகர்லால் நேரு அறிவித்துள்ளார்.

இந்தியா போரை விரும்பாத நாடு. எல்லைப் பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் சுமுக தீர்வு காணவே விரும்புகிறோம். ஆனால் அராஜகம், ஆணவம், அத்துமீறலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ருமேனிய அதிபர் கார்கே கார்கி உத்தேஜ் வரவேற்பு விழாவில் நேரு பேசும்போது, ‘‘எனக்கு முன்பு பேசிய ருமேனிய அதிபர் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், ஆமோதிக்கிறேன்" என்றார்.

முரண்பாடு

இந்தியா அமைதியை விரும்பும் நாடு. சர்வதேச அமைதிக்காக குரல் கொடுக்கும் நாடு என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், இப்போது இந்தியாவே போரிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது முரண்பாடாக இருக்கலாம். நிர்பந்தம் காரணமாகவே ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம்.

இப்போதைய பிரச்சினை குறித்து ஏற்கெனவே பலமுறை விரிவாக எடுத்துரைத்துள்ளேன். இப்போது இந்த மேடையில் மீண்டும் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க விரும்புகிறேன். அராஜகத்தை எதிர்த்து போரிடாமல் இருந்தால், அதல பாதாளத்தில் விழ நேரிடும். இந்தியா போரை விரும்பவில்லை. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் போரை தவிர்க்க முடியவில்லை.

அராஜகம், ஆணவம், அத்துமீறலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது, தலைவணங்காது. எல்லை பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். நாட்டின் மரியாதை, கவுரவம், நிலப் பகுதிகளைக் காப்பாற்ற என்ன விலை கொடுக்க நேரிட்டாலும் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். எந்த பின்விளைவுகளுக்கும் அஞ்ச மாட்டோம் என்று பிரதமர் நேரு கூறினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் எழுச்சி அடைந்து இடிபோல முழங்கினர். அந்த வளாகம் முழுவதும் மக்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது.

"இப்போதைய போரினால் அமைதி பாதையை இந்தியா கைவிட்டுவிட்டது என்று கருத வேண்டாம். எப்போதும் அமைதியே மட்டுமே விரும்புகிறோம். சர்வதேச பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். வேறு வழியின்றி போரில் குதித்துள்ளோம். இது வேதனை அளிக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ருமேனிய அதிபரிடம் ஓர் உறுதிமொழியை அளிக்கிறேன். எப்போதும் போல இந்தியா அமைதிக்கு மட்டுமே குரல் கொடுக்கும்" என்று நேரு கூறினார்.

பாதையில் மாற்றமில்லை

அனைத்து நாடுகளுக்கும் இந்தியா நட்புக் கரத்தை நீட்டுகிறது. ஏதாவது ஒரு நாடு, நமது நட்பை நிராகரித்து, நஞ்சு நாக்கால் தீண்ட முயன்றால் நமக்கும் வேறு வழியில்லை. அவர்கள் பாணியிலேயே தகுந்த பதிலடி அளிக்க வேண்டிய சூழ்நிலை எழுகிறது. அதற்காக அடிப்படை கொள்கைகளில் இருந்து இந்தியா விலகிவிட்டதாக அர்த்தம் இல்லை. எங்களது அமைதி பாதையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆயுத குறைப்பு, உலக அமைதிக்காக ருமேனியாவுடன் இந்தியா இணைந்து பணியாற்றும். அனைத்து நாடுகளும் வளர்ச்சி அடைய வேண்டும், வளமடைய வேன்டும். போர் இல்லாத பூவுலகம் உருவாக வேண்டும். இதுவே இந்தியாவின் விருப்பம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் வளத்தை கண்டுபிடிக்க ருமேனியா பெரிதும் உதவியுள்ளது. அதற்காக அந்த நாட்டு அதிபருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் ருமேனியாவும் நட்பு நாடுகள். ருமேனியாவின் வளர்ச்சியில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் பெர்லின் விவகாரமும் ஒன்றாகும். இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். ருமேனிய அதிபர், பிரதமரின் இந்திய பயணத்தால் இரு நாடுகளின் உறவு மேலும் வலுவடையும் என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

(கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா போரின்போது, என்ன நடந்தது என்பது குறித்து ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழில் வெளியான செய்தியின் தமிழாக்கம்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x