Published : 02 Jul 2020 04:15 PM
Last Updated : 02 Jul 2020 04:15 PM
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய நாட்டு அதிபர் விளாமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றிப் பெற்ற 75 ஆண்டு நிறைவு விழாவுக்கும், ரஷ்யாவில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிப்பது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதற்கும் பிரதமர் மோடி, புதினுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்திய மற்றும் ரஷ்ய மக்களுக்கு இடையேயான நட்புறவின் குறியீடாக, 2020 ஜூன் 24 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்தியப் படையினர் பங்கேற்றதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
உலகளவில் கொவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளை சரிசெய்ய இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை இரண்டு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். கொவிட் தொற்றுக்கு பிறகான உலகம், எதிர்கொள்ளப் போகும் சவால்களை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தீர்ப்பதற்கான முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டுக்கான, இருதரப்பு தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளைத் தொடர்வதென இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
தொலைபேசி அழைப்பு விடுத்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அதிபர் புதின் இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பான மற்றும் ராஜதந்திர உறவுகளை, அனைத்து பரிணாமங்களிலும் மேலும் வலுப்படுத்துவதில் தனது உறுதியையும் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT