Published : 02 Jul 2020 03:56 PM
Last Updated : 02 Jul 2020 03:56 PM
பயணிகள் ரயில்களை இயக்குவதில் தனியாருக்கு வாய்ப்பளிக்க ரயில்வே முன்வந்திருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஏழைகளின் உயிர்நாடியை பறிக்கிறீர்கள், மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
பயணிகள் ரயில்போக்குவரத்தில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விருப்பமுள்ள தகுதியான நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் முதல் கட்டப்பணியை ரயில்வே தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு தனியார் துறை ரயில்களை இயக்கலாம். 109 ஜோடி தடத்தில் 151 நவீன தொழில்நுட்ப ரயில்களை தனியார் இயக்க ரயில்வே அனுமதியளித்துள்ளது. ஏற்கெனவே சில வழித்தடங்களில் மட்டும் ஐஆர்சிடி மட்டும் ரயில்களை இயக்கி வருகிறது
குறிப்பாக, அதன்படி, லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ், வாரணாசி-இந்தூர் வழியாக தி காசி மகால் எக்ஸ்பிரஸ், அகமதாபாத்-மும்பை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்பட்டு வருகிறது
கரோனா வைரஸ் பாதிப்புக்கு முன், ரயில்வே துறையில் ரயில்களை இயக்குவதற்காக ஆர்.கே.கேட்டரிங், அதானி போர்ட்ஸ், மேக் மை ட்ரிப், இண்டிகோ ஏர்லைன்ஸ், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவை விருப்பம் தெரிவித்திருந்தன.
இது தவிர சர்வதேச நிறுவனங்களான அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட், பாம்பாரிடார், சீமன்ஸ் ஏஜி, மெக்குவாரி ஆகிய நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரயில்கள் இயக்கத்தை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்கள் இயக்கத்தில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “ ரயில்கள் மட்டும்தான் ஏழைகளின் உயிர்நாடியாக இருப்பவை. அதையும் அவர்களிடம் இருந்து மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தையும் பறித்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தேசத்தின் மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என இந்தியில் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT