Published : 02 Jul 2020 03:15 PM
Last Updated : 02 Jul 2020 03:15 PM
எல்லையில் நாம் 20 வீரர்களை இழந்தோம். சீனா தரப்பில் உயிரிழப்பு இரு மடங்காக இருந்திருக்கும். நமது வீரர்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளனர் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் காணொலி வாயிலாக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார்.
அப்போது அவர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
''இப்போது நீங்கள் இரு சி(C) க்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பீர்கள். ஒன்று கரோனா வைரஸ், மற்றொன்று சீனா. எல்லையில் நடக்கும் எந்தப் பிரச்சினையையும் அமைதியாகவும், பேச்சின் மூலம் தீர்க்கவே இந்தியா எப்போதும் விரும்பும். ஆனால், யாரேனும் இந்தியாவுக்குத் தீங்கு செய்ய நினைக்கும் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதற்குத் தகுந்த பதிலடியை இந்தியா வழங்கும்.
எல்லையில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தார்கள். நிச்சயம் சீன ராணுவம் தரப்பில் 40 வீரர்கள் இறந்திருப்பார்கள். இரு மடங்காக இருக்கும்.
இதுவரை எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் எனும் விவரத்தை சீனா வெளியிடவில்லை என்பதை அறிவீர்கள். உரியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல், புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு கடந்த காலங்களில் இந்தியா எப்படி பதிலடி கொடுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நம்முடைய பிரதமர் மோடி கூறியதுபோல், நம்முடைய வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது. அதற்கு அர்த்தம் இருக்கும். அதற்குரிய பதிலடியை இந்தியா வழங்கும்.
இந்திய மக்களின் தரவுகளைக் காக்கும் வகையில் மத்திய அரசு, சீனா மீது டிஜிட்டல் தாக்குதல் நடத்தி 59 சீன செயலிகளைத் தடை செய்துள்ளோம். ஆனால், மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு ஏன் திரிணமூல் காங்கிரஸ் எதிர்க்கிறது?
மேற்கு வங்கத்தில் நாங்கள் விசித்திரமான போக்கைக் காண்கிறோம். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சீனாவின் செயலிகளைத் தடை செய்தால், ஏன் தடை செய்தீர்கள் என்று கேட்கிறது,
இதற்கு முன் ஏன் சீன செயலிகளைத் தடை செய்யவில்லை என்று கேட்டது. இது விசித்திரமான போக்கு. சிக்கலான நேரங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸால் ஏன் துணை நிற்க முடியவில்லை''.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் கூறுகையில், “சீனாவின் 59 செயலிகளையும் மத்திய அரசு தடை செய்தது கண்துடைப்பு. மக்களிடம் ஒருவிதமான கிளர்ச்சியைத் தூண்டும் முடிவு. சீன செயலிகளுக்குப் பதிலாக இந்தியச் செயலிகளைக் களமிறக்க வேண்டும். இந்திய- சீன எல்லை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியாக இருப்பது வியப்பாக இருக்கிறது. இதேபோன்றுதான் கடந்த 1962-ம் ஆண்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி காத்தது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT