Published : 02 Jul 2020 06:42 AM
Last Updated : 02 Jul 2020 06:42 AM

புதிதாக 1,088 ஆம்புலன்ஸ்கள்; ஜெகன்மோகன் தொடக்கம்: ஓட்டுநர் ஊதியம் ரூ.10 ஆயிரம் அதிகரிப்பு

கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆந்திராவில் 1,088 புதிய ஆம்புலன்ஸ்கள் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 108 மற்றும் 104 எண்களின் சேவைகளுக்காக இந்த வாகனங்களை, முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் நேற்று தொடங்கி வைத்தார். படம்: வி.ராஜு

விஜயவாடா

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, ரூ.201 கோடியில் 1,088 ஆம்புலன்ஸ்களின் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பென்ஸ் கூட்டு ரோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.201 கோடியில் வாங்கப்பட்ட 1,088 ஆம்புலன்ஸ்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். நகர்ப்புறங்களில் இலவச சேவைக்காக 108 எண் கொண்ட ஆம்புலன்ஸ்களும், கிராமப்புறங்களில் மக்களின் இலவச மருத்துவ சேவைக்காக 104 எண் கொண்ட இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

குழந்தைகளுக்காக

இந்த ஆம்புலன்ஸ்களில் 26 வாகனங்கள், குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஆந்திராவில் 1,19,545 பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற அளவில் இருந்தது. தற்போது, 74,609 பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வீதம் நடமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு சராசரியாக ஆண்டுக்கு 6,33,600 பேருக்கு இந்த ஆம்புலன்ஸ்கள் சேவை புரிந்தன. தற்போது, ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பேருக்கு ஆம்புலன்ஸ் சேவையை அளிக்க முடியும்.

முன்னதாக புதிய ஆம்புலன்ஸ்களின் அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஆந்திர அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஓட்டுநர் ஊதியம்

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர்ஆந்திர முதல்வர் தனது அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் குண்டூர் ஜி.ஜி.எச்.அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு வார்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, "மருத்துவர்களின் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை. ஆம்புலன்ஸ் சேவையை அதிகரித்துள்ளதால், விலை மதிப்பில்லா ஏழைகளின் உயிர்களை காக்க இயலும். 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் சேவையும் பாராட்டுக்குரியது. ஆதலால் இவர்களின் மாத ஊதியமும் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x