Published : 01 Jul 2020 05:23 PM
Last Updated : 01 Jul 2020 05:23 PM
நெய்வேலி மின் உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் 7 அலகுகள் உள்ளன. இங்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் இன்று (ஜூலை 1) கொதிகலன் பிரிவில் 30 மீட்டர் உயரத்தில் நீராவிக் குழாய் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. அப்போது, அங்கு பணியிலிருந்த தொழிலாளர்கள் சுமார் 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த அனல்மின் நிலைய முதலுதவிக் குழுவினர் மற்றும் சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, உடனடியாக என்எல்சி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய 12 பேர், திருச்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களைத் தேடும் பணி அனல்மின் நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நெய்வேலி மின்உற்பத்தி நிலைய கொதிகலனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா, சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்தார்.
நிவாரணப் பணிகளுக்கு உதவ, ஏற்கெனவே மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விபத்தினால் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT