Published : 01 Jul 2020 05:13 PM
Last Updated : 01 Jul 2020 05:13 PM
பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி தொழில்நுட்ப தரமேம்பாட்டுச் சேவையில் சீன நிறுவனங்கள் எதையும் அனுமதிக்கக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டதையடுத்து, அதற்குரிய டெண்டரை பிஎஸ்எல்எல் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்துக்குப்பின் சீனாவுக்கு எதிரான மனநிலை உள்நாட்டில் வலுத்து வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ரயில்வே திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு கொடுத்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா அரசு ரூ.5500 கோடியில் சீன நிறுவனங்களுடன் செய்திருந்த ஒப்பந்த்ததை நிறுத்தி வைத்தது. நெடுஞ்சாலைத் தி்்ட்டங்களிலும், சிறுகுறுநடுத்தர நிறுவனங்கள் முதலீட்டிலும் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
மேலும், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கும் நேற்று அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்த சூழலில் பிஎஸ்என்எல் 4ஜி தர சேவை மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் பல்வேறு சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரப்பட்டு இருந்தன. இப்போது சீன நிறுவனங்கள் எதையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டாம் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டதால் 4ஜி டெண்டரை பிஎஸ்என்எல் ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை சீன நிறுவனங்கள் ஏதேனும் டெண்டர் எடுத்திருந்தால், அந்த டெண்டரை ரத்து செய்து புதிதாக மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாகத் டெண்டரை வெளியிடுமாறும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சீன உபகரணங்கள் எதையும் 4ஜி தரமேம்பாட்டுச் சேவைப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது, உள்நாட்டு தொழில்நுட்பத்தையே பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைவரிடம் கருத்துக் கேட்க பிடிஐ நிருபர் முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT