Last Updated : 01 Jul, 2020 03:17 PM

1  

Published : 01 Jul 2020 03:17 PM
Last Updated : 01 Jul 2020 03:17 PM

எல்.ஐ.சி.யிலிருந்து முதலீட்டைத் திரும்ப பெறுவது தற்சார்பு இந்தியாவுக்கு எதிரானது: பிரதமர் மோடிக்கு ஊழியர்கள் கூட்டமைப்பு கடிதம்

புதுடெல்லி

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து (எல்.ஐ.சி) மத்திய அரசு தன் முதலீட்டை வாபஸ் பெறுவது குறித்த திட்டத்தைக் கைவிடுமாறு ஆயுள் காப்பீட்டு நிறுவன அனைத்திந்திய ஊழியர்கள் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

முதலீட்டை வாபஸ் பெறுவது பிரதமர் மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு எதிரானதாகும் என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பினாய் விஸ்வம் கூறும்போது, முன்மொழியப்பட்ட பங்குகள் வெளியீடு தொடர்பாக ஆலோசனை நிறுவனங்கள், முதலீட்டு வங்கியாளர்கள், நிதி நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற ஒப்பந்தப் புள்ளிகளை மத்திய அரசு கோரியிருப்பதாக எழும் செய்திகள் கவலையளிக்கின்றன என்றார்..

பிரதமருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், “எல்.ஐ.சியிலிருந்து முதலீட்டைத் திரும்ப பெறும் முடிவில் பிரதமர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்திய கிரீடத்தில் இருக்கும் பல ரத்தினங்களில் எல்.ஐ.சி.யும் ஒன்று. உங்களது மிகச்சரியான தொலைநோக்குத் திட்டமான ஆத்மநிர்பார் பாரத் அதாவது தற்சார்பு இந்தியா என்பதற்கு முதலீட்டை வாபஸ் பெறுவது எதிரானது. இது எல்.ஐ.சி.யை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான அடிக்கல்லாகும். இது தேச நலன்களுக்கு விரோதமானது.

1956-ல் தொடங்கிய எல்.ஐ.சி. இந்தியாவில் நலிவுற்றோருக்கும், ஊரகப்பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கும் குறைந்த பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை திறம்பட வழங்கி வருகிறது. தேச முன்னுரிமைகள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த வரவு என்ற அடிப்படையில் எல்.ஐ.சி. முதலீடு முக்கியப் பங்கு வகிக்கிறது.

மார்ச் 31, 2019 வரை மக்களின் பயன்களுக்காக முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.29 லட்சத்து 84 ஆயிரத்து 331 கோடி ஆகும். இந்நிலையில் அரசு முதலீட்டை வாபஸ் பெறும் முடிவை நடைமுறைப்படுத்தினால் அது பாலிசிதாரர்களையே பாதிக்கும்.

முதலீட்டு வாபஸ் பெறப்பட்டால் எல்.ஐ.சி தனது சமூகப்பிரிவு முதலீடுகளான வீட்டு வசதி, மின்சாரம், பாசனம் உள்ளிட்டவைகளின் மீதான முதலீடுகள் குறித்து மறு ஆய்வுக்கு உட்படுத்த நேரிடும்.

எல்.ஐ.சியின் மகா வாக்கியமான ‘யோகஷேமம் வஹாம்யஹம்’ அதாவது ‘உங்கள் ஷேம நலமே உங்கள் பொறுப்பு’ என்ற கொள்கை நிச்சயம் தோற்றுப் போகும். ஆகவே எல்.ஐ.சி.யிலிருந்து முதலீட்டை வாபஸ் பெறும் முடிவை தேச நலன்களுக்காக கைவிட வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டு இது உங்கள் ஆத்மநிர்பார் பாரதத்துக்கு பெரிய ஊக்கமளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x