Published : 01 Jul 2020 03:00 PM
Last Updated : 01 Jul 2020 03:00 PM
மருத்துவர்கள் தினமான இன்று உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியச் செவிலியர்களுடன் காணொலி மூலம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாடி, அவர்களை அஹிம்சை ராணுவ வீரர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் புதுடெல்லி, நியூஸிலாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பணியாற்றும் இந்தியச் செவிலியர்களுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக உரையாடினார்.
30 நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலில் நியூஸிலாந்தில் இருந்து அனு ராஹத், ஆஸ்திரேலியாவிலிருந்து நரேந்திர சிங், பிரிட்டனில் இருந்து ஷ்ரல்மோல் புரவதே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையிலிருந்து விபின் கிருஷ்ணன் ஆகியோர் ராகுல் காந்தியுடன் பேசினர்.
கரோனா வைரஸ் காலத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த அனுபவம், இக்கட்டான நிலையில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த விதம், கரோனா வைரஸின் தீவிரம், ஒவ்வொரு நாட்டின் அரசும் கரோனாவை அணுகிய விதம் ஆகியவை குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
ராகுல் காந்தி பேசுகையில், “மருத்துவர் தினத்தில் அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதாரத் துறையில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட இந்தத் துறையில் உள்ள அனைவரும் கரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்கும் ஆயுதம் ஏந்தாத, அஹிம்சை ராணுவ வீரர்கள்.
ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரிடம் சமீபத்தில் நான் பேசினேன். அப்போது அவர் என்னிடம் தெரிவிக்கையில், 'கோவிட் நோயாளிகளைப் பரிசோதிக்காமல் செவிலியர்களோ, மருத்துவர்களோ வேலை செய்ய இயலாது.
நோயாளிக்குக் கரோனா இருக்கிறதா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டால், அவரை எங்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியையும், நோயால் பாதிக்கப்படாத ஒருவரையும் மருத்துவமனையில் எங்கு அனுமதிப்பது எனத் தெரியாமல் மருத்துவர்கள் மனவெறுப்பு சூழலுக்கு ஆளாகினர்' என என்னிடம் தெரிவித்தார்.
கரோனாவில் உருவாகியுள்ள பிரச்சினை ஒன்றும் மோசமானது அல்ல என்ற கருத்தை உருவாக்கி அதை நிர்வகிக்க அரசுகள் முயல்கின்றன. ஆனால், நான் என்ன நம்புகிறேன் என்றால், நாம் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும், பிரச்சினையை ஏற்க வேண்டும், பிரச்சினையைத் துல்லியமாக வரையறை செய்து போராட வேண்டும். பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் விபின் கிருஷ்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். அவர் பேசுகையில், “டெல்லியில் அதிகரித்து வரும்போது, மக்களுக்கு கரோனா பரிசோதனை போதுமான அளவில் செய்யாதது வருத்தமாக இருந்தது.
கரோனாவுடன் ஏராளமான செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் போரிடுகிறார்கள். அவர்கள் கரோனாவால் உயிரிழந்தால், அவர்களுக்கு இழப்பீடு வழங்காதது கவலையளிக்கிறது.
டெல்லியில் தென் இந்தியாவைச் சேர்ந்த இரு செவிலியர்கள் கரோனாவில் உயிரிழந்தார்கள். எக்ஸ்ரே தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், எயம்ஸ் மருத்துவமனையின் ஓய்வுபெற்ற செவிலியர் ஒருவரும் கரோனாவில் உயிரிழந்தார்கள். இவர்கள் இருவரின் குடும்பத்தாருக்கும் இதுவரை இழப்பீட்டுத் தொகையான டெல்லி அரசு அறிவித்த ரூ.1 கோடி வழங்கப்படவில்லை
ஒரு உயிரின் இழப்பை பணத்தால் ஈடுகட்ட முடியாது. இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆதரவாக அந்தப் பண உதவி இருக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு டெல்லி அரசு உதவி செய்ய வேண்டும்.
கரோனாவுக்கு எதிரான போரில் நாங்கள் முன்களத்தில் நின்று போராடுகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். நீங்களும், மத்திய அரசும் எங்களுடன் இருக்கிறீர்கள். கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் முழுமையான வெற்றியை அடைவோம் என நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட ராகுல் காந்தி, “நிச்சயமாக உங்கள் கோரிக்கையை டெல்லி அரசுக்குக் கடிதம் மூலம் தெரிவித்து நிவாரணம் கிடைக்க உதவுவேன்” என உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT