Published : 01 Jul 2020 01:30 PM
Last Updated : 01 Jul 2020 01:30 PM
கரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பள்ளிக் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் அல்லது கட்டணம் செலுத்துவதை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் லாக்டவுன் காலத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புக்கு உண்மையில் என்ன செலவு ஆகிறதோ அந்தக் கட்டணத்தை மட்டும் பெற்றோர்களிடம் இருந்து பள்ளிகள் வாங்க வேண்டும். மற்ற கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், குஜராத், ஹரியாணா, உத்தரகாண்ட், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்களின் பெற்றோர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வழக்கறிஞர் மயங்க் கிரிஷ்சாகர் என்பவர் மூலம் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
''இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வாழும் அடிப்படை உரிமை, கல்வி கற்கும் அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். கரோனா வைரஸ் லாக்டவுனால், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு விதங்களில் கல்வி கற்பதில் பாதிக்கப்படுகிறார்கள்.
கரோனா லாக்டவுனால் ஏராளமான பெற்றோர் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தொழில் நடத்த முடியவில்லை. ஊதியக் குறைப்பைச் சந்தித்துள்ளனர். பெரும் பணநெருக்கடியான இந்தச் சூழலில் குழந்தைகளின் அதிகமான கல்விக் கட்டணம் மேலும் சிக்கலில் வைக்கிறது.
பள்ளிகள் வசூலிக்கும் அதிகமான கட்டணம், நாங்கள் அனுபவிக்கும் நிதிப் பிரச்சினை ஆகியவற்றால் வேறு வழியின்றி குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் முறையற்ற ரீதியில் கட்டணத்தை வசூலிக்கின்றன. ஆன்லைன் வகுப்பு நடத்துவதில் மாணவர்களிடையே பெரும் பாகுபாட்டை உருவாக்குகிறது.
சில மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துள்ளன, சில மாநிலங்களில் அந்தப் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக கர்நாடகா, மத்தியப் பிரதேச மாநிலங்கள் ஆன்லைன் கல்வி முறைக்குத் தடை விதித்துள்ளன. மற்ற மாநிலங்கள் ஆன்லைன் கல்வியின் பாதிப்பை உணரவில்லை.
கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து கடந்த 3 மாதங்களாக பள்ளிகளுக்கு நேரடியாக மாணவர்கள் செல்ல முடியாத சூழல் இருக்கிறது. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்கு மாறியுள்ளன.
ஆனால், ஆன்லைன் வகுப்பு ஒரே மாதிரியாகவும், இருப்பதில்லை. கட்டண அடிப்படையிலும் மாறுபடுகிறது. சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தாதபோதிலும் இப்போதே கட்டணத்தை செலுத்தக் கோருகின்றன. சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்கும் சேர்த்துக் கட்டணம் வசூலிக்கின்றன.
கல்விக் கட்டணத்தை உயர்த்தி ஏராளமான தனியார் பள்ளிகள் பெற்றோரையும், மாணவர்களையும் துன்புறுத்துகின்றன. ஒட்டுமொத்த காலாண்டுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று பள்ளிகள் வற்புறுத்துகின்றன. பள்ளிகள் தொடங்காதபோது கட்டணம் முழுமையையும் செலுத்தக் கோருகின்றன.
தனியார் பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, கட்டணமும் தற்போதுள்ள சூழலில் வசூலிக்கக்கூடாது என்று பல மாநில அரசுகள் அறிவித்தும் அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதில் விலக்கு, ஒத்திவைப்பு, கட்டணக் குறைப்பு என எதுவும் இல்லை.
லாக்டவுன் காலத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரை தனியார் பள்ளிகள், உதவி பெறும் தனியார் பள்ளிகள் , மாணவர்கள் பள்ளிக்கு வராதபோது, எந்தவிதமான கட்டணத்தையும் பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என உத்தர வேண்டும்
ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால், உண்மையில் ஆன்லைன் வகுப்பு நடத்த என்ன செலவு ஆகுமோ அதை மட்டும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மற்ற கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT