Published : 30 Jun 2020 01:32 PM
Last Updated : 30 Jun 2020 01:32 PM
பாகிஸ்தானின் கராச்சி பங்குச்சந்தை தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி பொறுப்பற்றவகையில் அபத்தமாகப் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதில் இந்தியாவுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
கராச்சி நகரின் சந்திரகர் சாலையில் பாகிஸ்தானின் பங்குச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காரில் வந்த 4 தீவரவாதிகள் பங்குச்சந்தைக்குள் நுழைய முயன்றபோது, போலீஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் முடிவில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். போலீஸார், பொதுமக்கள் என 7 பேர் பலியானார்கள்.
இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் அஃல்வி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கராச்சியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள்தான் இந்தத் தாக்குதலைச்செய்துள்ளார்கள் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி அபாண்டமான குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.
இதற்கு இந்தியத் தரப்பில் பாகிஸ்தானுக்குக் கடும் பதிலடி தரப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று அளித்த பேட்டியில் பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில், “பாகிஸ்தானைப் போல் அல்ல இந்தியா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கராச்சியில் மட்டுமல்ல உலகில் தீவிரவாதச் செயல் எங்கு நடந்தாலும் அதைக் கண்டிக்க இந்தியா தயங்காது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இதுபோல் பொறுப்பற்ற ரீதியில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. இதை கடுமையாக இந்தியா மறுக்கிறது.
உலக அளவில் தீவிரவாதி என்று அறியப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனைத் தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் புகழ்ந்தார் என்பதை குரேஷி மறந்துவிடக்கூடாது. பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT