Published : 30 Jun 2020 08:07 AM
Last Updated : 30 Jun 2020 08:07 AM

வெண்ட்டிலேட்டரை அகற்றியதால் கரோனா நோயாளி உயிரிழப்பு: 'மூச்சுவிட முடியவில்லை அப்பா' என கதறும் வீடியோ வேகமாக பரவுகிறது

ரவிக்குமார்

ஹைதராபாத்

தெலங்கானாவில் கரோனா நோயாளி ஒருவர் வெண்டிலேட்டர் அகற்றப்பட்டதால் உயிரிழந்துள்ளார். முன்னதாக, தான் படும்அவதியை செல்போனில் படம்பிடித்து தந்தைக்கு அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத் ஜவஹர் நகரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவரின் மகன் ரவிக்குமார் (34).10 ஆண்டுகள் வரை துபாயில் பணியாற்றிய இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத் திரும்பினார். இவருக்கு 12 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 24-ம் தேதி மூச்சுவிட சிரமப்பட்ட ரவிக்குமாரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது கரோனா அச்சம் காரணமாக 11 தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், ஒரு மருத்துவமனையில் இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு. தொற்று உறுதி செய்யப்பட்டது. என்றாலும் ரவிக்குமாரின் உடல்நிலை மோசமடைந்ததால், எர்ரகட்டா பகுதியில் உள்ள அரசுமார்பக நோய் மருத்துவமனையில் அன்று இரவு 11.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதிஇரவு, இவருக்கு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது. என்றாலும் மூச்சுவிட சிரமமாக இருப்பதால் தனக்கு மீண்டும் வெண்டிலேட்டர் வைக்கும்படி அங்கிருந்த மருத்துவர்களிடம் ரவிக்குமார் முறையிட்டதாகவும் ஆனால் அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ரவிக்குமார் வெண்டிலேட்டர் இன்றி தான் படும் அவதியை செல்போனில் படம் பிடித்து தனது தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

அந்தப் பதிவில், “அப்பா எனக்கு ஆக்சிஜன் எடுத்துவிட்டனர். என்னால் மூச்சுவிட முடியவில்லை. 3 மணி நேரமாக நான் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனது கடைசி நேரம் நெருங்கிவிட்டதாக கருதுகிறேன். செல்கிறேன் டாடி” என உருக்கமாக பேசி தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் இதை அவரது தந்தை தாமதமாகப் பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு கதறி அழுதபடி ஓடிவந்தார். ஆனால் அதற்குள் ரவிக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ரவிக்குமாரின் இந்தவீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x