Published : 30 Jun 2020 06:38 AM
Last Updated : 30 Jun 2020 06:38 AM

இந்தியாவின் கோரிக்கையை ஏற்றது பிரான்ஸ்: விரைவில் வருகிறது ரஃபேல் விமானங்கள்

புதுடெல்லி

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, ரஃபேல் போர் விமானங்களை ஒப்படைக்கும் பணியை பிரான்ஸ் துரிதப்படுத்தி உள்ளது.

இந்திய விமானப் படையை பலப்படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸோ ஏவியேஷன்’ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரஃபேல் போர் விமானம் அதிநவீன வசதிகளைக் கொண்டது. இந்த விமானம் இரட்டை இன்ஜின் கொண்ட ஜெட் போர் விமானம் ஆகும். விமானம் தாங்கி போர்க் கப்பலில் இருந்தும், கரையோர விமானப் படை தளத்தில் இருந்தும் இயங்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிநவீன ரேடார் வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை அவ்வளவு எளிதாக சுட்டு வீழ்த்திவிட முடியாது. மிகவும் கடும் குளிர் நிலவும் காஷ்மீரின் லே, லடாக் போன்ற மலை உச்சிகளில் அமைந்துள்ள விமான தளங்களில் இருந்து கூட இந்த விமானத்தை இயக்க முடியும்.

இந்நிலையில் சீனாவுடன் எல்லையில் பிரச்சினை நிலவுவதைத் தொடர்ந்து ரஃபேல் போர் விமானங்களை ஒப்படைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்ட பிரான்ஸ் நிறுவனம் அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக வரும் ஜூலை 27-ம் தேதி ஹரியாணாவில் உள்ள அம்பாலாவில் 6 ரஃபேல் போர் விமானங்களை டஸ்ஸோ நிறுவனம் ஒப்படைக்க உள்ளது.

இந்த வகை விமானங்களில் 9 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும். ஹரியாணாவின் அம்பாலாவில் ஒரு ரஃபேல் குழுவும், மேற்கு வங்க மாநிலம் ஹசிமராவில் ஒரு ரஃபேல் குழுவும் செயல்படும்.

இந்த வகை விமானங்களை இந்திய விமானப் படை விமானிகளே இயக்குவர். 6 விமானங்களைத் தொடர்ந்து 4 விமானங்கள் 2-வது கட்டமாக இந்தியா வந்து சேரும். பிரான்ஸில் இருந்து வரும் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள படை தளத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் இந்தியா வந்து சேரும்.

நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியில் விமானத்தில் நீண்டதூரத்துக்கு பயணம் செய்யஇருப்பதால் ரஃபேல் போன்ற விமானங்கள் நமது படையின் பலத்தை அதிகரிக்கும்.

மீதமுள்ள விமானங்கள் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் டஸ்ஸோ நிறுவனம் ஒப்படைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x