Published : 29 Jun 2020 11:51 AM
Last Updated : 29 Jun 2020 11:51 AM
ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி மசூத் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தெற்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டம், குல் சோஹர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்க ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர், ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவினர், போலீஸார் ஆகியோர் சேர்ந்து இன்று அதிகாலை குல் சோஹர் பகுதியை சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளில் இருவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்றும் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி மசூத் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில் “ ஆனந்த்காக் மாவட்டத்தில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் ஹஸ்புல் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி மசூத் கொல்லப்பட்டார், லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் தீவிரவாதி மசூத் ஒரு பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துகொண்டார். அதன்பின் காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டு வந்தார். மசூத்தை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படைக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம் தற்போது தீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தோடா மாவட்டத்தில் இருந்த கடைசி தீவிரவாதி மசூத் மட்டுமே அவரும் தற்போது கொல்லப்பட்டுவிட்டார். இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 100 தீவிரவாதிகளுக்கும் அதிகமாக பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT